இந்திய சினிமாவின் தொழில்நுட்ப ’கிங்’: இயக்குநர் ஷங்கர் பிறந்தநாள் இன்று!

இந்திய சினிமாவின் தொழில்நுட்ப ’கிங்’: இயக்குநர் ஷங்கர் பிறந்தநாள் இன்று!
இந்திய சினிமாவின் தொழில்நுட்ப ’கிங்’: இயக்குநர் ஷங்கர் பிறந்தநாள் இன்று!
Published on

இன்று இந்தியாவின் பிரமமாண்ட இயக்குநர்: இந்திய சினிமாவின் அறிவியல் ஆளுமை  ஷங்கரின் 57-வது பிறந்தநாளை திரையுலகமும் அவரது ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள். பிரமாண்டம், அதிநவீன தொழில்நுட்பம், பலகோடி பட்ஜெட் என்றாலே ஜெட் வேகத்தில் நினைவுக்கு வருகிறவர் இயக்குநர் ஷங்கர்தான். சமூகத்தில், இப்படியொரு மாற்றம் நிகழ்ந்துவிடாதா? என்று கற்பனைக்கு எட்டாத  சூப்பர் ஹீரோதான் ஷங்கரின் கதைக்கரு.

தற்போது, 2020 ஆம் ஆண்டு. அவர், முதல் படம் வெளியானது 1993 ஆம் ஆண்டு. இந்த 27 வருடங்களில் பதிமூன்றே படங்கள்தான் இயக்கியிருக்கிறார். ஆனால், அவர் இயக்கிய அத்தனைப் படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். அதுவும், தமிழகம் தாண்டி, இந்தியாவிலிருந்து இடம்மாறி, உலகளவில் உச்கொட்ட வைத்து வசூலை வாரிக்குவித்த படங்கள்.

தென்னிந்தியா அல்ல; இந்தியாவிலேயே முன்னணி இயக்குநர். கோடிகளில் புரளும் சினிமாவில், வெற்றிகரமான இயக்குநரான அவர்,  பணம் சம்பாதிக்க நினைத்திருந்தால் வருடத்திற்கு ஒரு படம் இயக்கியிருந்தாலும், இந்நேரம் 27 படங்களை இயக்கியிருப்பார். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. மக்களுக்கும் சமூகத்திற்கும் தரமாகவும் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் கலந்த படங்களை கொடுக்க நினைத்தார். அதனால், ஒவ்வொரு படத்திற்கும் மூன்று ஆண்டுகள்வரை எடுத்துக்கொண்டார். அதன்விளைவு, தமிழர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் அறிவியல் மீது காதலே வந்தது.

ஜென்டில்மேன் படத்தில் ’சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு’ பாடலில் கிராஃபிக்ஸை ஆரம்பித்தவர், காதலன் படத்தில் ‘முக்காலா’ பாடலில் பிரபுதேவாவின் கால்கள் இல்லாத நடனத்தின்மூலம் தொழில்நுட்பத்தில் தெறிக்கவிட்டார். அவரது மூன்றாவதுப் படமான ஊழலுக்கு எதிரான இந்தியனோ ஊழல்பேர்வழிகள் மற்றும் லஞ்சவாதிகளின் முகத்தில் அறைந்தது.

அடுத்தபடமான ’ஜீன்ஸ்’ மூலம்  உலக அதிசயங்களை செலவில்லாமல் மக்களுக்கு காட்டி அதிசயக்க வைத்தார். ஒரு முதல்வர் எப்படி இருக்கவேண்டும் என்று ‘முதல்வன்’ படம் மூலம் ஆட்சியாளர்களுக்கு உணர்த்தினார். பாய்ஸில் ஃப்ரெஷ்ஷான காதல் சிக்கலை காட்டினார். அதன்பிறகு, வந்த அந்நியன், சிவாஜி, எந்திரன், 2:o என அடுத்தடுத்து இந்திய சினிமாவை உலகரங்கில் உச்சம் தொடவைத்தார். இன்று இந்திய மாணவர்கள் ரோபோடிக்ஸ் படிப்பை படிப்பதற்கும் அறிவியல் மீது ஆர்வம் கொண்டதற்கும் 1993 காலகட்டத்திருந்தே ஊக்கமாக இருந்து வருகிறார் ஷங்கர்.

1963 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி பிறந்தார். சினிமா மீதான் ஆர்வத்தால் நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஷங்கர், கடந்த 1993 ஆம் ஆண்டு அர்ஜூன் மதுபாலா நடித்த ஜென்டில்மேன் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இயக்குநராக மட்டுமல்ல: தயாரிப்பாளராகவும் ஜெயித்திருக்கிறார். காதல், இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி, வெயில், கல்லூரி என ஷங்கர் தயாரித்த, இந்தப் படங்கள் சமூக பிரச்சனைகளையும் சாதிய பிரச்சனைகளையும் சமூகத்திற்கு சொல்லியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com