விஷாலை பெரிய சூரன், புரட்சித் தளபதி என நினைத்தேன். ஆனால் அவர் பயந்து ஓடிவிட்டார் என நடிகர் சேரன் விமர்சித்துள்ளார்.
நடிகர் விஷால் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்ற பின்னர், முதல்முறையாக அச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில், ஓய்வு பெற்ற நீதிபதி ராமநாதன் பார்வையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், துணைத் தலைவர் பிரகாஷ் ராஜ், எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல்ராஜா, டி.ராஜேந்தர், சேரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பொதுக்குழுவின் போது விஷால் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என இயக்குநர் சேரன் தரப்பினர், மைக்குகளை பிடுங்கி ரகளையில் ஈடுபட்டனர். இதனால் விஷால் தரப்பினர் மற்றும் சேரன் தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழு கூட்டம் உடனடியாக நிறுத்தப்பட்டது.
பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய சேரன், “விஷாலை தயாரிப்பாளர் சங்கத் தலைவராக ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த 450 உறுப்பினர்கள் இருக்கும்போது, அந்த உறுப்பினர்களுக்கு மரியாதை கொடுக்காமல் அவராக பொதுக்குழுவை முடித்துவிட்டு போய்விட்டார். அவரை நான் பெரிய சூரன், புரட்சித் தளபதி என்றெல்லாம் நினைத்திருந்தேன். ஆனால் அவர் பயந்து ஓடிவிட்டார். எனவே பயந்தவர்களுக்கெல்லாம் நான் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை, அதேபோல் விஷாலுக்கும் இனிமேல் எதுகுறித்தும் பேச தகுதி இல்லை” என்று கூறினார்.