ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா மிஷ்கின் உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள டெவில் திரைப்படம் வரும் பிப்ரவரி 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்திற்கு இயக்குநர் மிஷ்கின் இசையமைத்துள்ளார். இதற்கிடையே, படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடந்தபோது, நடித்தவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
படத்தில் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்துள்ள மிஷ்கின் பேசியபோது, ”என் தம்பி விதார்த்துக்கு நான் உதவி செய்வதாக எழுதியதை படித்தேன். அப்போது எனக்கு வெட்கமாக இருந்தது. காரணம், என்னிடம் அவன் உதவி இயக்குநராக வாய்ப்பு கேட்டபோது செருப்பை தூக்கி அடித்துவிட்டேன். என்னை பொருத்தவரை கஷ்டப்படும் சூழலில் இருந்து வருபவர்களைத்தான் நான் உதவி இயக்குநராக சேர்த்துக்கொள்வேன்.
நடிகர் விதார்த் மிகவும் கடினமாக உழைத்து வருகிறார். இன்னும் பல ஆண்டுகள் சினிமாவில் இருக்க வேண்டும் என்று விழைகிறேன். 6 ஆண்டுகளாக இசையை கற்று வருகிறேன். என்னிடம் வந்து இசையமைத்துக்கொடுங்கள் என்று கேட்டபோது என்னால் மறுக்க முடியவில்லை” என்று பேசினார். அப்போது படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களைப் பற்றியும் மிகவும் நெகிழ்ச்சியாக பேசினார்.
தொடர்ந்து நடிகை பூர்ணா குறித்து பேசியபோது, ”அடுத்த பிறவியில் பூர்ணா வயிற்றில் மகனாக பிறக்க வேண்டும். பூர்ணாதான் எனக்கு அம்மாவாக இருக்க வேண்டும். அவரை பார்க்கும்போதெல்லாம் ஆச்சரியப்படுவேன். மிகவும் மேன்மையானவள். அதனால் என் படத்தில் அவர் இருக்க வேண்டும். எங்கள் இருவர் குறித்தும் தவறாக பேசுவார்கள். ஆனால் அப்படியெல்லாம் கிடையாது. கற்பனையான உலகத்தில் நிஜமாக வாழ்வதுதான் நடிப்பு.
நடிக்கும்போது சுயத்தை மறப்பவர்கள் எல்லாம் மிகப்பெரிய நடிகர்கள். அப்படித்தான் மாபெரும் நடிகையாக இருக்கிறார் பூர்ணா. அவர் சாகும் வரை நடிக்க வேண்டும். மிகவும் உன்னதமான நடிகை அவர். என் குழந்தையைவிட உன் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்” என்று உருக்கமாக பேசினார். அப்போது அவரது பேச்சை கேட்ட நடிகை பூர்ணா, ஆனந்த கண்ணீர் வடித்தார்.
தொடர்ந்து, ஒரு மகனாக மிஷ்கின் இருந்தால் அவருக்கு நீங்கள் என்ன அறிவுரை வழங்குவீர்கள் என்று பூர்ணாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த மிஷ்கின், “மிஷ்கின் அவருக்காக வாழ்வதில்லை.
மற்றவர்களுக்காகவே வாழ்கிறார். அவரைப்பற்றி எனக்குத் தெரியும். அவருக்காக ஒருமுறையாவது வாழ வேண்டும் என்பது எனக்கு ஆசை” என்று நெகிழ்ச்சியாக பேசினார்.