ரைட்டர் இமேஜினேஷன்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் மகாவிஷ்ணு இயக்கும் படம், ’நான் செய்த குறும்பு’. ’கயல்’ சந்திரன், அஞ்சு குரியன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த விழாவில், ஐந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.
’கயல்’ சந்திரன் கர்ப்பமாக இருப்பது போலவும் அவர் வயிற்றில் ஹீரோயின் அஞ்சு குரியன் காதை வைத்துக் கேட்பது போலவும் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. இது மலையாளத்தில் வெளியான ’கர்ப்பஸ்ரீமான்’ என்ற படத்தின் போஸ்டரை போல இருந்ததால், அந்த படத்தின் ரீமேக்காக இருக்கலாம் என்று கருதப்பட்டது. அந்தப் படத்தில் மலையாள காமெடி நடிகர் சுராஜ் வெஞ்சிரமூடு கர்ப்பமான ஆணாக நடித்திருப் பார்.
இதுபற்றி ’நான் செய்த குறும்பு’ படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான மகாவிஷ்ணுவிடம் கேட்டபோது, ’படத்தின் போஸ்டரை பார்த்து எல்லோரும் மலையாள படம் ரீமேக் என நினைக்கலாம். இதே போன்று ஆங்கிலத்திலும் படம் வெளியாகி இருக்கிறது. இது அந்த படங்களில் இருந்து வித்தியாசமானது. அதற்கும் இதற்கும் சம்மந்தமில்லை. இது ரொமான்டிக் காமெடி, சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். குடும்பத்தோடு
அனைவரும் பார்க்கும் படமாக இது இருக்கும். நான் யாரிடமும் உதவி இயக்குனராக இல்லாமல் இந்தப் படத்தை இயக்குகிறேன். இதற்கு முன், டிவி மீடியாவில் சில வருடங்கள் பணிபுரிந்தேன். ’நரகாசுரன்’ படத்தை கேரளாவில் வெளியிட்டேன்.
தமிழ் சினிமாவில் 1500 தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 900 பேரிடமாவது பேசியிருப்பேன். அவர்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் பலரும் படம் எடுக்க வருவ தில்லை. காரணம் தப்பான கதை, தப்பான படக் குழு அமைந்ததால் தான். ஒரு நல்ல மேனேஜர் கொண்ட படக் குழு அமைந்துவிட்டால் சினிமாவில் இழப்புக்கு இடமே இல்லை . எனக்கு அப்படி அமைந்துள்ளது’ என்றார்.
(மகா விஷ்ணு, கயல் சந்திரன், அஞ்சு குரியன்)
’கயல்’ சந்திரன் பேசும் போது, ’இப்படத்தின் பர்ஸ்ட் லுக் பார்த்து ட்விட்டரில் பலவிதமான கருத்துகள் வந்தன. சிலர் ஒரு மாதிரியான படமாக இருக்குமோ என்று கூறியிருந்தார்கள். நான் சொல்கிறேன், இது சுரேஷ் கிருஷ்ணாவின் 'ஆஹா' படம் மாதிரி குடும்பத்துடன் பார்க்கும் படி இருக்கும். பெண்கள் படும் கஷ்டம் ஆண்களும் பட்டால்தான் தெரியும் என்று சொல்கிற படம்’ என்றார்.
விழாவில் படத்தின் நாயகி அஞ்சு குரியன், நடிகர் மிர்ச்சி விஜய், இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி, ஒளிப்பதிவாளர் ரமணன் புருஷோத்தமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.