மம்மூட்டி, அஞ்சலி, சாதனா, சமுத்திரக்கனி, திருநங்கை அஞ்சலி அமீர், சுராஜ் வெஞ்சரமூடு உட்பட பலர் நடித்துள்ள படம், ‘பேரன்பு’. ராம் இயக்கியுள்ள இந்தப் படத்தை ஸ்ரீராஜலட்சுமி பிலிம்ஸ் சார்பில் பி.எல்.தேனப்பன் தயாரித்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
தமிழ், மலையாளத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கார் ஓட்டுனராக மம்மூட்டி நடித்துள்ளார். பட வேலைகள் நிறைவடைந்த நிலையில் ‘பேரன்பு’ திரைப்படம் வரும் பிப்ரவரியில் வெளியாக உள்ளது. படத்தின் பாடல்கள், டிரைலர் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற நிலையில் படத்தை திரையில் காண சினிமா ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் பேரன்பு திரைப்படம் குறித்து அப்படத்தின் இயக்குநர் ராம், இந்து தமிழ் திசை நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பேரன்பு குறித்து பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.
கற்றது தமிழுக்கு முன்னதாகவே பேரன்பு கதையை யோசித்துவிட்டேன். இது மம்மூட்டிக்கான படம். இது அவருக்கான கதை. இந்த தகவல் நடிகை பத்மபிரியா மூலம் மம்மூட்டிக்கு சென்றது. கதை பிடித்துபோகவே படத்தில் நடிக்க மம்மூட்டி ஒப்புக்கொண்டார்.
பேரன்பு திரைப்படம், நீங்கள் வாழக்கூடிய வாழ்க்கை ரொம்ப சந்தோஷமானது என்று உணர வைக்கும். எந்த வித பிரச்சினைகள், சிக்கல்கள், சங்கடங்கள் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி இந்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்துவிட முடியும் என்ற நம்பிக்கையை பேரன்பு தரும். குரோதம், எரிச்சல், வருத்தம், இயலாமை ஆகியவற்றைத் தாண்டி நிம்மதியாக வாழ்ந்துவிட முடியும் என்று நிறைவை இந்தப் படம் கொடுக்கும். அதனால்தான் ‘பேரன்பு' என்ற தலைப்பையே வைத்தேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படத்துக்கான வரவேற்பு குறித்து பேசிய அவர், படத்தை பார்த்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். தமிழ்ப் படங்கள் குறித்து ஆங்கிலத்தில் விமர்சனம் எழுதும் ஓலஃப் முல்லர், இதுதான் உன் சிறந்த படம் என்று என்னை பாராட்டினார். சர்வதேச திரைப்பட விழாக்களில் பேரன்பு திரையிடப்பட்டது. அங்குள்ள மொழி தெரியாத மக்கள் அவர்களுடைய வீட்டுக்கு என்னை சாப்பிட கூப்பிட்டார்கள், என்ன கட்டி அணைத்து பாராட்டு தெரிவித்தனர். அதையெல்லாம் மறக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.