இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள ‘ஜே பேபி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’, ‘ரைட்டர்’, ‘குதிரைவால்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ளப் படம் ‘ஜே பேபி’. தினேஷ், ஊர்வசி, மாறன், கவிதா பாரதி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். அறிமுக இயக்குநர் தினேஷ் மாரி இப்படத்தை இயக்கியுள்ளார். டோனி பிரிட்டோ இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், இன்று இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசர் முழுக்க ‘ஒன் வுமன் ஆர்மி’யாக ஆக்கிரமித்துள்ளார் ஊர்வசி. தாய்க்கும் மகன்களுக்கும் இடையேயான பாசத்தை வெளிப்படுத்தும் படமாக அமைந்துள்ளது என்பதை டீசர் உணர்த்துகிறது. ‘வெல்லம் விக்கப் போகும்போது காத்தடிக்குது... பொறி விக்கப் போகும்போது மழை வருது’.. ‘ஏன் ரெண்டையும் சேர்த்து பொறி உருண்டை விக்க வேண்டித்தானே’ என்று மாறன் பேசும் வசனங்களும் டீசரில் கவனம் ஈர்த்துள்ளன. சமீபத்தில் வெளியான ‘கேஜிஎஃப் 2’ , ‘டான்’ உள்ளிட்டப் படங்கள் வரிசையில் இதுவும் ஒரு அம்மா செண்டிமெண்ட் படம்.
தற்போது ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தை இயக்கி முடித்துள்ள பா.ரஞ்சித் அடுத்ததாக ‘விக்ரம் 61’ படத்தினையும் கமல்ஹாசனுடன் இணையும் படத்தினையும் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.