"வட பாட்டாளி சகோதரர்கள் மீது வன்மத்தை விதைப்பது சரியான அரசியல் அல்ல”- இயக்குநர் நவீன்

"வட பாட்டாளி சகோதரர்கள் மீது வன்மத்தை விதைப்பது சரியான அரசியல் அல்ல”- இயக்குநர் நவீன்
"வட பாட்டாளி சகோதரர்கள் மீது வன்மத்தை விதைப்பது சரியான அரசியல் அல்ல”- இயக்குநர் நவீன்
Published on

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துவரும் நிலையில், சில சர்ச்சை பேச்சுகளும் எழுந்து வருகிறது. அப்படியான சிலவற்றுக்கு எதிர்வினையாற்றியதன் மூலம், சமீபகாலமாக பேசுபொருளாகியுள்ளார் மூடர்கூடம் திரைப்பட இயக்குநர் நவீன்.

ஈரோட்டில் பிரசாரம் ஒன்றில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “மீசை வச்ச ஆம்பளையா இருந்தா...” எனக்குறிப்பிட்டு ஆளுங்கட்சியை அநாகரீகமான முறையில் சாடியிருந்தார். இதற்கு எதிர்வினையாற்றிய இயக்குநர் நவீன், “ஆம்பளயா இருக்கறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு? உங்கள் தலைவர் இரும்புப்பெண் ஜெயலலிதா அம்மையார் ஆம்பளயா? நீங்கள் தவழ்ந்து சென்று கால்பிடித்த சசிகலா ஆம்பளயா? இன்னும் எத்தனை காலம் இந்த stereotype வசனம் பேசுவீங்க? இது பெண்களை இழிவு படுத்தும் செயல்” என ட்விட்டரில் குறிப்பிட்டார். அவரின் இக்கருத்துக்கு பலதரப்பிலிருந்து வரவேற்பும் ஆதரவும் கிடைத்தது. இருப்பினும் சிலர், இது கட்சி சார்ந்த தாக்குதல் எனக்குறிப்பிட்டனர்.

இதற்கிடையே இன்று நவீன் மற்றொரு கருத்தை பகிர்ந்துள்ளார். தற்போது, அதுவும் பேசுபொருளாகியுள்ளது. அதில் நவீன், “வடவர் ஆதிக்கத்தை எதிர்ப்பது சரி. ஆனால் வடக்கிலிருந்து பிழைப்பு தேடி வரும் ஒடுக்கப்பட்ட பாட்டாளி சகோதரர்கள் மீது வன்மத்தை விதைப்பது சரியான அரசியல் அல்ல. இந்த உலகம் அனைவருக்கும் பொதுவானது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பதே தமிழர் அறம். அன்பு சமத்துவம் மட்டுமே தமிழர் தத்துவம்” என்று குறிப்பிட்டுள்ளார்..

தமிழ்நாட்டில் வட இந்தியர்களின் தாக்கம் அதிகமாக இருப்பது, சமீபகாலமாகவே பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இணையவாசிகள் பலரும்கூட ‘வடக்கன்’ என்ற சொல்லைக்கொண்டு வடமாநில தொழிலாளர்களை கேலியும் கிண்டலும் செய்துவருகின்றனர். சில அரசியல் தலைவர்களும்கூட அவர்களை விமர்சித்து வருகின்றனர். ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்திலும் அப்படியான சில சம்பவங்கள் நடந்தன. இதையொட்டி நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதில் அவர், “வடக்கனும் கிழக்கனும் தெற்க்கனும் மேற்க்கனும்... நம்மைப்போல் தன் குடும்பத்தைக்காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான். யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று கூறியிருந்தார்.

அந்தக் கருத்து பலராலும் வரவேற்கப்பட்ட நிலையில், தற்போது இயக்குநர் நவீனும் இதை ஆதரிப்பதுபோல தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com