வேலைக்காரன் படத்தில் தான் நடித்த காட்சிகள் குறைக்கப்பட்டதற்கு நடிகை சினேகா வருத்தம் தெரிவித்திருந்தார். அதற்கு படத்தின் இயக்குனர் மோகன் ராஜா விளக்கம் அளித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் மோகன் ராஜா இயக்கி உள்ள திரைப்படம் வேலைக்காரன். அந்தப் படத்தில் நடித்துள்ள சினேகா தனது காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளதாக தனது வருத்தத்தை பகிர்ந்து கொண்டிருந்தார். மேலும், “மொத்தம் 18 நாட்கள் என்னுடைய காட்சிகள் எடுக்கப்பட்டது. இதற்காக மிக கஷ்டப்பட்டு நடித்தேன். சில நாட்கள் சாப்பிடாமல் கூட இருந்திருக்கிறேன். ஆனால் படத்தில் என்னுடைய காட்சிகள் திடீரென்று குறைக்கப்பட்டுள்ளது. அதை நினைத்தால் வருத்தமாக உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
இவரது புகாருக்கு தற்போது இயக்குநர் மோகன் ராஜா விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், “சினேகாவின் காட்சிகள் குறைக்கப்பட்டது குறித்த வருத்தம் எங்கள் எல்லோருக்கும் இருக்கிறது. அவரது காட்சிகள் மட்டுமல்ல வேறு சிலரின் காட்சிகள் நீக்கப்பட்ட வருத்தமும் எனக்கு உள்ளது. யாரையும் ஏமாற்ற வேண்டும் என்பதற்காக அப்படி நாங்கள் செய்யவில்லை. சினேகாவின் கதாப்பத்திரத்தின் படி 90 நாட்கள் நடப்பதாக ஸ்கிரிப்ட்டில் இருந்தது. இதற்காக அவர் நிறைய காஸ்டியூம் அணிந்து நடிக்க வேண்டியிருந்தது. அவரின் முகத் தோற்றத்திலும் நிறைய மாற்றங்களை காட்ட நினைத்தோம். அவரது பெரும்பாலான காட்சிகள் மாண்டேஜ் பாணியில் எடுக்கப்பட்டது. ஆகவேதான் அவர் அதிக நாட்கள் நடிக்க வேண்டி இருந்தது. சில காட்சிகள் நீக்கப்பட்டாலும் அவரது கேரக்டர் இன்று பேசப்படுகிறது. அவ்வளவு முக்கியத்துவம் பெற்றது அவரது கதாப்பாத்திரம். இருந்தாலும் நாங்கள் தவறு செய்திருப்பதாக சினேகா கருதினால் மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று இயக்குநர் கூறியிருக்கிறார்.