கமர்ஷியல் சினிமா, ஆர்ட் சினிமா எனும் ஒப்புமையையெல்லாம் கடந்துவிட்டதாக இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், “ஒரு படைப்பாளியின் பயணம் முற்றிலும் விநோதமானது. அவர்களது வெற்றி என்பது அவர்கள் எத்தனை கைதேர்ந்த இரசவாதி, அவர்கள் படைப்பை படைக்கும் விதம் ஆகியவற்றால் மட்டுமே மதிப்பிடப்படுகிறது. இயற்கையாகவே ஒரு எளிய எண்ணத்தை, மிகப்பெரும் கருத்துருவாக்கமாக மாற்றுவதும் மற்றொரு வகையில் மக்கள் கொண்டாடும் படைப்பாக்குவதும் பிரமிப்பு தரும் படைப்பாளியின் திறன் தான்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இவை அனைத்தையும் நிரூபித்து அதனையும் கடந்த படைப்பாளி ஆகிவிட்டேன் எனவும் தனக்கென ஒரு தனியான நேர்த்தியை கைகொண்டு, உருவாக்கத்தில் உன்னத வடிவத்தை அடைந்து விட்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கமர்ஷியல் சினிமா, ஆர்ட் சினிமா எனும் ஒப்புமையையெல்லாம் கடந்து இறுதியில் அன்பை பேசும் படைப்பை தருவதே தனது அழகு எனத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் “பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ” என மூன்று தொடர் வெற்றிகளை தந்து அனைத்து ஜானர்களிலும் தான் ஒரு ராஜா என நிரூபித்துள்ளதாகவும், இதை மாபெரும் வெற்றி என்று கூறுவதை விட “அளவில்லாத அன்பு” என்றே கூறுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
“நான் இந்தப்படங்களை கண்மூடித்தனமான நம்பிக்கையில் தான் உருவாக்கினேன். ஆனால், இறுதியில் அளவிலா அன்பை பெற்றிருக்கிறேன். “கண்மூடித்தனாமான நம்பிக்கை, ஆத்மாவின் தேடல்” இரண்டும் தான் வாழ்வின் உள்ளார்ந்த அர்த்தம் என்பதை நம்புவன் நான். “பிசாசு” நாயகன் சித்தார்த், “துப்பறிவாளன்” கணியன் பூங்குன்றன், “சைக்கோ” கௌதம் அனைவரும் இந்த மந்திரத்தை நம்புபவர்களே.
ரசிகர்கள் இதனை வாழ்வின் அன்பாக எடுத்து செல்ல வேண்டுமென்பதே என் விருப்பம். நான் வெகு பணிவுடன் இந்த படங்களின் தயாரிப்பாளர்கள், பணிபுரிந்த நடிகர், நடிகையர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், விமர்சகர்கள், என் வளர்ச்சியை விரும்பும் அன்பு உள்ளங்கள், ரசிகர்கள் அனைவருக்கும் எனக்கு தனித்துவ வெற்றி தந்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இதே போல் அனைவரையும் மகிழ்விக்கும் திரைப்பயணத்தை தொடர விரும்புகிறேன். மிக விரைவில் எனது அடுத்த பயணம் பற்றிய அறிவிப்பை வெளியிடுகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார் மிஷ்கின்.