‘துணிவு’ திரைப்பட கொண்டாட்டத்தின்போது அஜித் ரசிகர் ஒருவர் உயிரிழந்த நிலையில், ‘இது வெறும் சினிமா தான், உயிரை விடுற அளவுக்கு கொண்டாட்டம் தேவை இல்லை’ என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
தேசிய இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு கோவை வருமானவரித்துறை சார்பில், துடியலூர் பகுதியில் இளம் தொழில் முனைவோர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். அவருக்கு விருது வழங்கி பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாம் செலுத்தும் வரி எங்கு செல்கிறது எனத் தெரிந்தால், அதை சுமையாக பார்க்காமல் மகிழ்ச்சியாக செலுத்துவோம். எனவே, அது குறித்து விழிப்புணர்வுகளை வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளேன்” என்று தெரிவித்தார்.
சினிமாவில் யார் நம்பர் 1 என்று எழும் பேச்சுகள் தொடர்பாக கேட்பப்பட்ட கேள்விக்கு, “சினிமாவை பொறுத்தவரை அனைத்துப் படங்களும் ஓட வேண்டும். எல்லா ரசிகர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து” என்றுக் கூறினார். மேலும் இரு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது ரசிகர்களின் கொண்டாட்டங்களால் உயிரிழப்பு ஏற்படுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “படம் வெளியீட்டு கொண்டாட்டங்களில் ஏற்படும் இறப்புகளை தவிர்க்க வேண்டும், ரசிகர்களும் தங்களது பொறுப்புகளை உணர்ந்து நடந்துக்கொள்ள வேண்டும்.
உயிரை விடும் அளவிற்கு கொண்டாட்டங்கள் அவசியம் இல்லை. இது பொழுதுபோக்கு என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். சந்தோஷமாக சென்று படம் பார்த்துவிட்டு, பத்திரமாக வீட்டுக்கு செல்ல வேண்டும் என நினைக்கிறேன். உயிரை கொடுக்கும் அளவிற்கு ஏதும் இல்லை, உயிரிழக்கும் அளவிற்கான கொண்டாட்டம் தேவையில்லை என்பது எனது கருத்து” இவ்வாறு அவர் தெரிவித்தார்.