நடிகர் கமல்ஹாசனின் பாராட்டு கடிதத்தால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சியில் திகைத்துள்ளார்.
‘விக்ரம்’ படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், இப்படத்தின் கதாநாயகனான கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ்க்கு கைப்பட கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "அன்பு லோகேஷ், பெயருக்கு முன் திரு போடாமல் விட்டது விபத்தல்ல. திரு.கனகராஜ் அவர்களுக்கு உங்கள் பால் உள்ள உரிமையை உங்களை கேட்காமலேயே நான் எடுத்துக் கொண்டுவிட்டேன். இது நமக்குள்ளான தனிப்பட்ட கடிதம் என்பதால். மற்றபடி உங்கள் சாதனைக்கான பதவிக்கான மரியாதை பழையபடியே தொடரும், பொதுவெளியில், என் ரசிகர்கள் மற்ற ரசிகர்களை விட வித்யாசமானவர்களாக இருப்பது அவசியம் என்ற என் ஆசை, பேராசை என்றனர் என் விமர்சகர்கள்.
ஆனால் அதையும் தாண்டி என் முன்னணி ரசிகர் முன்னணித் திறமையாளராகவும் இருப்பது நான் ஆசைப்பட்டதை விட அதிகம். உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று நான் உட்பட யார் சொன்னாலும் நம்ப வேண்டாம். யூ டியூபைத் திறந்தால் வார்த்தைகளின் களஞ்சியமே தென்படும். அதில் உள்ள திரு லோகேஷ் கனகராஜ் தோத்திர மாலையிலிருந்து யார் வேண்டுமானாலும் வார்த்தை மலர்களை எடுத்து கொள்ளலாம். இவையெல்லாம் தொடர வாழ்த்துக்கள். அயராது விழித்திருங்கள், தனித்திருங்கள், பசித்திருங்கள். உங்கள் அன்ன பாத்திரம் என்றும் நிறைந்திருக்கும் உங்கள் நான் கமல்ஹாசன்” என எழுதியுள்ளார்.
அந்த பாராட்டுக் கடிதத்தை லோகேஷ் கனகராஜ், நெகிழ்ச்சியுடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 'லைப் டைம் செட்டில்மென்ட் லெட்டர்' என்றும், அதனைப் படிக்கும்போது வரும் உணர்வை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.