அஜித் குமார் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் துணிவு படம் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது என்பது உறுதியானாலும் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என அஜித் ரசிகர்கள் கண்கொத்தி பாம்பாக காத்துக்கிடக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் நேற்று இரவு அதிரடியாக திடீரென துப்பாக்கியை ஏந்தியபடி சால்ட் & பெப்பர் லுக்கில் இருக்கும் அஜித்தின் துணிவு பட போட்டோவை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை திகைப்பூட்டியிருக்கிறார்கள். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் ஹிட் அடித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், படத்தின் இயக்குநர் ஹெச். வினோத் சினிமா எக்ஸ்பிரஸ் தளத்துக்கு பேட்டி அளித்திருக்கிறார்.
அதில் அவர் குறிப்பிட்ட ஒன்றோடு சேர்த்துதான் அஜித்தின் புது துணிவு ஸ்டில்லோடு வைரலாக்கி வருகிறார்கள் ரசிகர்கள். அதாவது “துணிவு is a game of villains.. அது ஒரு அயோக்கியர்களின் ஆட்டம்” என்ற வார்த்தைகள் அஜித் ரசிகர்களை தூண்டிவிட்டிருக்கிறது.
இதுபோக பல சுவாரஸ்ய தகவல்களை இயக்குநர் ஹெச்.வினோத் பகிர்ந்துள்ளார். அதில், “தீரன், சதுரங்க வேட்டை பாணியிலான படங்கள் எடுக்கச் சொல்லி நிறைய பேர் சொல்வது உண்டு. அந்த கேள்வி நியாயமானதாக தெரியவில்லை. ஏனெனில் ஒரே பாணியிலான படங்களை எடுப்பதற்கு பதில் ட்ரெண்டுக்கு ஏற்றார் போல படம் எடுக்க வேண்டும் என்பதே என் எண்ணம். அதே சமயத்தில் தீரன் மாதிரி இன்னொரு படம் எடுத்தால் “இவன் ஏன் ஒரே மாதிரி படம் பண்ரான்னு திட்டுற முதல் ஆளா அந்த கேள்விய கேட்டவங்களாதான் இருப்பாங்க”.
வலிமை படத்துக்காக நாங்கள் எங்கள் முழு உழைப்பையே போட்டிருந்தோம். ஆனால் படம் ரிலீசான முதல் இரண்டு நாள் ஏராளமான விமர்சனங்களையே எதிர்கொண்டோம். மூன்றாவது நாள் குடும்பமாக மக்கள் படம் பார்க்க வந்தபோதுதான் கள நிலவரமே தெரிந்தது. ஆகையால் முதல் இரண்டு நாளில் பெற்ற விமர்சனங்களை பாடமாக கொண்டு பல விஷயங்களை கற்றுக்கொண்டோம். அதை துணிவிலும் கடைபிடித்திருக்கிறோம். துணிவு படத்தில் கிடைக்கும் பாடத்தை அடுத்த படத்தில் அப்ளை செய்வோம்.
ஒருவர் உங்களை ஏன் கொண்டாடுகிறார் அல்லது விமர்சிக்கிறார் என்பதற்கான காரணத்தைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது. நேர்மையான இடத்தில் இருந்து வருவதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். துணிவு பற்றி நிறைய பேச்சுகள் உள்ளன, அவற்றில் எத்தனை உண்மையிலிருந்து இதுவரை உள்ளன என்பதை நான் அறிவேன். உண்மையைச் சொன்னால், இது ஒரு வகைப் படமாகப் பிரிக்க முடியாத பல வகைப் படம். துணிவு படம் மங்காத்தா, பில்லா மாதிரியான படமா என பல கருத்துகள் உலவிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கெல்லாம் சொல்ல விரும்புவது ஒன்றுதான். துணிவு ஒரு மல்டி ஜானர் படம். குறிப்பாக சொல்லனும்னா இது ஒரு வில்லன்களின் விளையாட்டு... அது ஒரு அயோக்கியர்களின் ஆட்டம்..” எனக் கூறியிருக்கிறார்.
கமல் ஹாசனை வைத்து இயக்கப் போவது குறித்த கேள்விக்கு, “நான் ஒரு நடிகரை சந்தித்ததாலேயே அது நடக்கும் என்று அர்த்தமல்ல. ஒரு தயாரிப்பாளர் அந்த படத்துக்கு க்ரீன் சிக்னல் காட்டுவதால், படம் நடக்கும் என்று அர்த்தமல்ல. ஒரு நடிகரை சந்திப்பதற்கும், தயாரிப்பாளரைக் கண்டுபிடிப்பதற்கும் இடையில் எக்கச்சக்கமான விஷயங்கள் நடக்கலாம். ஊடகங்களுக்கு எண்ணெய்யை ஊற்றி பெரிதாக்குவதற்கு பதில், நான் காத்திருக்கும் விளையாட்டை விளையாட விரும்புகிறேன்.” என்று தெரிவித்திருக்கிறார் ஹெச்.வினோத்.
கடைசியாக இயக்குநர் என்பது பற்றிய கேள்வி எழுப்பியதற்கு, “written and directed by என திரையில் வருவது ஆடியன்ஸ்டுக்கு மிகப்பெரிய விஷயம்தான். ஆனால் உச்ச நட்சத்திரங்கள் நடிக்கும் படத்தில் இயக்குநர்களின் பெயர் முன்னால் வருவது பெரிய மேஜிக். சொல்லப்போனால் இரண்டு தியேட்டருக்கு நேரடியாகச் சென்று கிட்டத்தட்ட 100 பேரிடம் அந்த படத்தின் இயக்குநரை பற்றி தெரியுமா என்று கேட்டேன். பலரும் தெரியாது என்றே சொன்னார்கள். ரஜினி, கமல், அஜித், விஜய் போன்றோர் தங்களை துறையில் நிலைநிறுத்திக்கொள்ள பல தசாப்தங்களாக உழைத்திருக்கிறார்கள். அதேபோல மணிரத்னம், ஷங்கர் போன்ற இயக்குநர்களுக்கான வரவேற்பு அவர்கள் செய்த பணிக்கான சான்று. அது போல, “அந்த இடத்துக்கு வர ஒரு பயங்கரமான உழைப்பு தேவை இருக்கு” எனக் கூறியிருக்கிறார்.