இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி இருவரின் அசாத்தியமான நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் ‘அமரன்’. 2014-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் உள்ள 44-வது ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பட்டாலியனில் பணிபுரிந்தபோது, ஷோபியானில் நடந்த காசிபத்ரி ஆபரேஷனில் முக்கியப் பங்கு வகித்து உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் இயக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவ வீரர்களின் தீரம்மிக்க வீரச்செயல்களை அடிப்படையாகக் கொண்டு காஷ்மீரின் சவால் மிக்க நிலப்பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கும் அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுவருகிறது. அமரன் திரைப்படத்தை பார்த்துவிட்டு தமிழக முதல்வர், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதலியோர் பாராட்டியிருந்த நிலையில், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அனைத்து முஸ்லிம் மக்களையும் பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாக கூறி ’அமரன்’ படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர், “அண்மையில் வெளிவந்துள்ள அமரன் என்ற திரைப்படம் மண்ணுரிமைப் போராளிகளை தீவிரவாதிகளாக சித்திரம் தீட்டி அந்த வெறுப்பின் வீச்சை ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் மீதும் பரப்பும் நுண்ணிய கருத்தியல் பயங்கரவாதத்தை கைக் கொண்டிருக்கிறது. முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுக்கூறுகளைக் கொண்ட இப்படத்தை பல தலைவர்களும் அதன் நுண்ணரசியல் அறியாமல் இப்படத்தை பாராட்டி இருப்பதும் வேதனைக்குரியது. இதை எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டும்” என விமர்சித்திருந்தார்.
அதுபோல் இயக்குநர் வசந்தபாலனும் விமர்சித்திருந்தார். அவர், ”காஷ்மீரின் அரசியலும் சூழலும் பேசப்படாமலேதான் இந்த படமும் கடந்து விட்டது வருத்தமே” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இயக்குநர் கோபி நயனார் இப்படம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர், “சமீபத்தில் நான் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த 'அமரன்' திரைப்படத்தை பார்த்தேன். அனைவரும் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் சிறப்பான நடிப்பை பாராட்டியதால் இது ஒரு சிறந்த திரைப்படம் என கருதுவதாகவும் எனக்கு புரியவில்லை. அதனால் இந்த படம் மிகப்பெரிய வசூலையும் ஈட்டி உள்ளது. ஆனால் இந்த திரைப்படம் சொல்ல வரும் கருத்தை பற்றி யாரும் பேச மறுக்கிறார்களா இல்லை கவனிக்க மறந்து விட்டார்களா என்ற கேள்வி எழுகிறது.
சமீபத்தில் நான் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த 'அமரன்' திரைப்படத்தை பார்த்தேன். அனைவரும் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் சிறப்பான நடிப்பை பாராட்டியதால் இது ஒரு சிறந்த திரைப்படம் என கருதுவதாகவும் எனக்கு புரியவில்லை. அதனால் இந்த படம் மிகப்பெரிய வசூலையும் ஈட்டி உள்ளது. ஆனால் இந்த திரைப்படம் சொல்ல வரும் கருத்தை பற்றி யாரும் பேச மறுக்கிறார்களா இல்லை கவனிக்க மறந்து விட்டார்களா என்ற கேள்வி எழுகிறது. படத்தின் திரைக்கதைக்கு பின் இருக்கும் ஒரு சமூகத்தின் துயரத்தை யாரும் கவனிக்கவில்லை என்பது வேதனை அளிப்பதாக உள்ளது.
ஒருவன் ஒரு குழந்தையை தனது துப்பாக்கியால் ஒரே குண்டில் கொல்கிறான். குழந்தை துடித்து இறக்கிறது. அதனைக் கண்ட தாய் துடிதுடிக்கிறாள். இதனைக் கண்ட அனைவரும் அவர் எவ்வளவு அருமையாகச் சுடுகிறார், அது குழந்தை என்பதால் இரண்டு மூன்று குண்டுகளால் துளைக்கப்பட்டு சாகக்கூடாது என ஒரே குண்டால் அந்த இதயத்தை நோக்கி பிரமாதமாகச் சுட்டு ஒரே நொடியில் அருமையாகக் கொல்கிறார் என சிலாகித்துப் பேசுகின்றனர். ஆனால் அங்கு கத்தி கதறி அழும் அந்த தாயை யாரும் கவனிக்கவில்லை.
எல்லோரும் அந்தக் குழந்தை எப்படி நேர்த்தியாக சுட்டுக் கொல்லப்பட்டது என்பதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அந்த குழந்தையின் மரணமும் அதன்பின் இருக்கும் வேதனையும் மறைக்கப்பட்டதே இந்த திரைப்படத்தின் கருத்தாக இருக்கிறது. நானும் சொல்கிறேன் அமரன் திரைப்படம் மிகச் சிறப்பாக இருந்தது லட்சக்கணக்கான காஷ்மீர் மக்களின் கண்ணீரோடு” என தெரிவித்துள்ளார்.
இதுஒருபுறம் இருக்க அமரன் படத்திற்கு தடை கோரி போராட்டங்கள் தொடங்கியுள்ளன. முஸ்லிம்கள் மீதுவெறுப்பை விதைத்து, நல்லிணக்கத்தை கெடுக்கும் ‘அமரன்’ திரைப்படத்தை தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்தி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ராஜ்கமல் நிறுவனத்தை எஸ்டிபிஐ கட்சியினர் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அதேபோல், இன்று தமிழகம் முழுவதும் அமரன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகள் முற்றுகையிடப்பட்டு போராட்டம் நடத்தப்படும் என இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்திருந்தன. அதனால், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திரையரங்குகள் முன்பாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. சில இடங்களில் முற்றுகை போராட்டமும் நடத்தப்பட்டது. சென்னையில் ராயப்பேட்டை உட்லண்ட்ஸ், விருகம்பாக்கம் ஐநாக்ஸ் போன்ற திரையரங்கிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.