ராஜினாமா கடிதம் கொடுத்தார் திலீப்: நடிகைகள் பார்வதி, ரம்யாவுக்கு கடும் எதிர்ப்பு!

ராஜினாமா கடிதம் கொடுத்தார் திலீப்: நடிகைகள் பார்வதி, ரம்யாவுக்கு கடும் எதிர்ப்பு!
ராஜினாமா கடிதம் கொடுத்தார் திலீப்: நடிகைகள் பார்வதி, ரம்யாவுக்கு கடும் எதிர்ப்பு!
Published on

நடிகர் சங்கத்தில் இருந்து விலகுவதாக நடிகர் திலீப், ’அம்மா’வுக்கு ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். இந்நிலையில் திரைப்பட பெண்கள் கூட்டமைப்பை சேர்ந்த நடிகைகளுக்கு அம்மாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கேரளாவில் பிரபல நடிகை ஒருவர் 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இதையடுத்து மலையாள நடிகர் சங்கமான ’அம்மா’வில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந் நிலையில் ’அம்மா’வின் தலைவராக இருந்த இன்னசென்ட் பதவியில் இருந்து விலகியதை அடுத்து மோகன்லால் தலைவர் ஆனார். அவர் பதவியேற்றதும் திலீப்பை சங்கத்தில் மீண்டும் சேர்த்தனர்.

(ரம்யா நம்பீசன்)

 இந்த முடிவுக்கு ரேவதி, பார்வதி, பத்மப்பிரியா, ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட திரைப்பட பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடிகர் சங்கத்தில் இருந்தும் விலகினர். 

இதையடுத்து திலீப்பை மீண்டும் சேர்ப்பது பற்றிய தங்கள் முடிவை ’அம்மா’ மாற்றியது. இந்நிலையில் நடிகர் திலீப், ‘நிரபராதி என்று நிரூபித்துவிட்டு சங்கத்தில் இணைகிறேன்’ என்று கூறினார்.

திலீப்பை சங்கத்தில் சேர்க்க தீர்மானம் நிறைவேற்றியதற்கு விளக்கம் அளிக்கும்படி ரேவதி, பார்வதி, பத்மபிரியா, ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பினர். இதுகுறித்து ரேவதி கூறும்போது, ‘நடிகர் சங்கத்தில் திலீப் இருக்கிறாரா? இல்லையா? என்பதை சங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்று விளக்கம் கேட்டோம். பதில் இல்லை. பாலியல் விவகாரங்களில் ஈடுபடும் சங்க உறுப்பினர்களின் குற்றம் நிரூபிக்கப் பட்டால் அவர்களை நிரந்தரமாக நீக்க சங்க விதியில் திருத்தம் கொண்டு வரும்படி கோரினோம். அதற்கும் பதில் இல்லை’ என்றார்.

(பார்வதி)

திலீப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் அதன் அடிப்படையில் அவரை சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

‘நடிகர் திலீப் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சட்டரீதியான ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. அது தெரிய வந்ததும் திரைப்பட பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நடிகைகளுக்கு பதில் அனுப்பி வைக்கப்படும். பொதுக்குழு கூடும் வரை அவர்கள் அமைதிகாக்க வேண்டும்’ என்று ’அம்மா’ செயற்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அஞ்சலி மேனன், ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன், பார்வதி, நடிகை ரேவதி உள்ளிட்டோரை கொண்ட மலையாள திரைப்படப் பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் கொச்சியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள், ’புதிய தலைவரான மோகன்லால் மீதான நம்பிக்கை போய்விட்டது. ’அம்மா’ எங்களை ஏமாற்றி வருகிறது’ என்று கூறினர்.

நடிகை ரேவதி கூறும்போது, ‘எந்த சங்கமாக இருந்தாலும் ஒருவர் மீது குற்றவழக்கு நிலுவையில் இருந்தால் அவரை இடைநீக்கம் செய்வதுதான் முதல் நடவடிக்கை. அப்போதுதான் சங்கம் ஒருதலைபட்சமாகச் செயல்படவில்லை என்பது தெரியவரும். ஆனால் விதிகளை காரணம் காட்டி அநியாயமாக செயல்படுகிறார்கள். குற்றவாளிகளை காப்பாற்றி சங்கத்தில் வைத்திருக்க முயல்கிறார்கள்’ என்றார்.

இந்நிலையில் ’அம்மா’ உறுப்பினர், நடிகர் சித்திக் கூறும்போது, ‘நடிகர் திலீப் சங்கத்தில் இருந்து விலகுவதாக கடந்த 10 ஆம் தேதி ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டார். தொடர்ந்து நடிகைகள் சிலர், நடிகர் சங்கத்தையும் மோகன்லாலையும் குறி வைத்து தாக்கி வருகிறார்கள். அவர் மாநில அரசின் விருது விழாவில் பங்கேற்பதை தடுத்தார்கள். நடிகை பார்வதி, மூத்த நடிகர் மம்மூட்டியை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்டு பிரச்னையை கிளப்புகிறார்.

அதற்கு பதிலாக அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். அவரது தவறுகள் காரணமாகவே மக்கள் அவரை குறை சொல்கிறார்கள். இந்த 3 நடிகைகளின் முயற்சியால் மம்மூட்டியையும் மோகன்லாலையும் மக்கள் மனதில் இருந்து நீக்கிவிட முடியாது’ என்ற அவர், நடிகர் சங்கத்தில் இருந்து வெளியே நடிகைகளை மீண்டும் சேர்க்கும் எண்ணமில்லை என் றும் திட்டவட்டமாகச் சொன்னார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com