நடிகையை பாலியல் வன்கொடுமை செய்ய, மலையாள நடிகர் திலீப் ஒன்றரை கோடி ரூபாய்க்கு கூலிப்படையை ஏவியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கேரள நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப், அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மூன்றாவது முறையாக ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு 75 நாட்கள் கடந்துள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அவரது தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், கேரள நடிகையை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுக்க ஒன்றரை கோடி ரூபாய்க்கு நடிகர் திலீப் கூலிப்படையை ஏவியது விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறினார்.
வழக்கின் முதல் குற்றவாளி பல்சர் சுனில் தலைமையிலான கூலிப்படையை ஏவியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
திலீப் வெளியே இருந்தால் முக்கிய சாட்சியங்களைக் கலைக்கக் கூடும் என்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் அரசு வழக்கறிஞர் வலியுறுத்தினார். இதை விசாரித்த நீதிமன்றம், ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.