பொன்னியின் செல்வன்-1 படத்திற்காக நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் கார்த்தி, “மேற்கத்திய படங்களில் விலங்குகளை நிறைய பார்க்கிறோம். ஆனால், தமிழில் மிக குறைவாகவே வருகிறது. ஆகையால், முக்கியமாக குதிரையையும் யானையையும் பார்ப்பதற்காகவே இப்படத்திற்கு வருவார்கள் என்று நானும் ஜெயம் ரவியும் பேசிக்கொண்டிருந்தோம்.
ஒரு குதிரையுடன் நாம் பழகினால் தான் அது நாம் சொல்லுவதை கேட்கும். எனக்கு ஏற்கனவே குதிரை பயணம் தெரியும். ஆனால், கொரோனா காலகட்டத்தில் ஒரே குதிரையை, எல்லா இடத்திற்கும் அழைத்துச் செல்ல முடியவில்லை. நான் கிட்டதட்ட 6 முதல் 7 குதிரைகளுடன் பழகினேன். குதிரை தன் காதை பின்புறம் திருப்பிக் கொண்டால் நம் பேச்சை கேட்கிறது என்று அர்த்தம். முன் பக்கம் இருந்தால் அது நம்மை மதிக்கவில்லை என்று அர்த்தம். அதனால் நாங்கள், குதிரைகளுடன் பேசிக் கொண்டே இருந்தோம்.
உங்களுக்கு எப்படி இந்த கதாபாத்திரம் வந்தது என்ற கேள்வியை விட பயம் அதிகமாக இருந்தது. மணி சார் தான் நம்பிக்கை கொடுத்தார். ஆனாலும், குந்தவை, நந்தினி போன்று பெண்கள் கதாபாத்திரங்களுடன் நடிக்கும் போது பயத்தோடும் பொறுப்போடும் தான் நடித்தேன். படப்பிடிப்பில் குதிரையில் இருந்து கீழே விழுந்து விட்டேன். ஆனால், மணி சார் எனக்கு தேவையான இடத்தில் அதையும் உபயோகிக்கப்படுத்திக் கொள்கிறேன் என்று சொன்னார். மேலும் ட்விட்டரில் வரும் கலந்துரையாடல் விளையாட்டாக ஆரம்பித்தது. ஆனால், அது இந்தளவு வைரல் ஆகும் என்று நான் நினைக்க வில்லை.
நம் வரலாற்றை பேசப்படும் படம் இது. அந்த காலத்தில் ராஜ ராஜ சோழன் எப்படி இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியுமா? என்று மணி சாரிடம் கேட்டேன். அப்போது புகைப்படம் இல்லை ஆகையால் அவரை பலருக்கு தெரியாது என்றார். ஜெயராம் சார் மாதிரி உரிமையாக யாரும் பழக முடியாது. இப்படத்திற்காக உபயோகப்படுத்திய, நாங்கள் அணிந்துகொண்ட நகைகள் அனைத்தும் உண்மையானவை. அதை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது பெரிய சவாலாக இருந்தது.
மணி சார் அந்த காலகட்டத்தை புரிந்து கொண்டு நடிக்க வேண்டும் என்று கூறினார். வந்திய தேவன் எதையும் யோசிக்காமல் உள்ளே செல்வான். பிரச்சனையில் மாட்டிக் கொள்வான். ஆனாலும், சுலபமாக வெளியே வந்து விடுவான். இது தான் இப்படத்தின் மூலம் நான் கற்றுக் கொண்டது” என்றார்.
- ஜான்சன்