இயக்குநர் அட்லீ மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜவான்’ படத்தை வாழ்த்தி தொகுப்பாளினி டி.டி. ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியின் தொகுப்பாளரான திவ்யதர்ஷினி என்கிற டி.டி. ரசிகர்களின் விருப்பமான தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார். மேலும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களை நேர்காணல் செய்வதில் வித்தியாசமான போக்கை கடைப்பிடித்து வருபவர். இதனால் பல பிரபலங்களுடன் டி.டி.க்கு நட்பு உண்டு.
அந்தவகையில், அண்மையில் திரையுலகில் நெருங்கிய நண்பர்கள் மட்டும் அழைக்கப்பட்டு நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில், தொகுப்பாளினியான டி.டி.யும் கலந்துகொண்டார். அப்போது நயன்தாரா திருமணத்தில் கலந்துகொள்ள வந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட டி.டி., அந்த புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ஷாருக்கானின் 30 வருட சினிமா வாழ்க்கையை முன்னிட்டு பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்தப் பதிவில், “நான் அவரை இறுகக் கட்டிப்பிடித்து, நான் சொல்ல விரும்பிய அனைத்தையும் அவரிடம் சொன்னேன். இவ்வளவு வருடங்கள் நீங்கள் எங்களுக்கு கொடுத்தது பல நினைவுகள். நீங்கள் எங்களுக்கு கொடுத்த மகிழ்ச்சி அளவில்லாதது. அனைத்திற்கும் நீங்கள் தகுதியானவர். சிறந்த வாழ்க்கையின் சிறந்தவர் நீங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப் பதிவை டேக் செய்து, ''நம்முடைய கிங் கான் என்று அழைக்கப்படும் ஷாருக்கான், சினிமா துறையில் 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் இந்த நேரத்தில் இந்தப் புகைப்படத்தை வெளியிடுவதற்கு நான் எப்போதும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களைப் போல் இதற்கு முன்பும், பின்பும் யாரும் இல்லை இவ்வாறு இல்லை. இந்த சந்திப்பிற்கு முக்கிய காரணமான இயக்குநர் அட்லீக்கு நன்றி. மேலும் 'ஜவான்' படம் மெகா பிளாக்பஸ்டர் ஹிட்டாகி 1000 கோடி ரூபாய் வசூல் செய்ய எனது வாழ்த்துகள்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஷாருக்கான் மற்றும் அவரின் மனைவி கௌரி கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் நிறுவனம், பெரும் பொருட்செலவில் ‘ஜவான்’ பத்தை தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் அட்லீ, பாலிவுட்டில் இயக்குநராகவும், நயன்தாரா கதாநாயகியாகவும் அறிமுகமாகின்றனர். இந்தப் படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ‘ஜவான்’ படம் அடுத்தாண்டு ஜூன் 2-ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.