’அட்ராங்கி ரே’வில் நடித்துவரும் தனுஷும் நடிகை சாரா அலிகானும் பேட்ட படத்தின் ‘மரணம் மாஸ்சு மரணம்’ பாடல் பின்னணியில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘ராஞ்சனா’ படத்தின் மூலம் தனுஷ் முதன் முதலில் பாலிவுட்டில் அறிமுகமானார். கிட்டதட்ட அது ஒரு மாஸான படம் தான். தனுஷிற்கு ஏற்ற கதாபாத்திரம். அந்த படத்தின் மூலம் தனுஷிற்கு பாலிவுட்டில் நல்ல அறிமுகம் கிடைத்தது. அதற்கடுத்ததாக, அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாசன் நடிப்பில் வெளியான ‘ஷமிதாப்’ படத்தில் வாய்பேசாத கலைஞனாக அசத்தினார். அமிதாப் உடன் போட்டி போட்டு தன்னுடைய நடிப்புக் கலையை வெளிப்படுத்தினார். தற்போது, மீண்டும் ஆனந்த் எல் ராய் இயக்கும் அட்ராங்கி ரே படத்தில் அக்ஷய் குமார், சாரா அலிகானுடன் இணைந்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் வாரணாசியில் ஆரம்பிக்கப்பட்ட, இப்படத்தின் படப்பிடிப்புகள் கொரோனாவால் தடைப்பட்டுப்போனது. சமீபத்தில் சினிமா ஷூட்டிங் நடத்த அனுமதி அளித்துள்ளதால், மீண்டும் ’அட்ராங்கி ரே’ மதுரை, டெல்லி என தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், தனுஷும் அவருக்கு ஜோடியாக நடிக்கும் சாரா அலிகானும் ரஜினியின் பேட்ட படத்தில் இடம்பெற்ற ’மரணம் மாஸ்சு மரணம்’ பாடலை பின்னணியில் பயிற்சியாளர் உதவியுடன் ரிலாக்ஸாக உடற்பயிற்சியினை செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் இருவரும் இணைந்தும் தனித்தனியாகவும் உடற்பயிற்சி செய்து கண்களை எனர்ஜியூட்டுகிறார்கள்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாரா அலிகான் பகிர்ந்துள்ள இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து ’மரணம் மாஸ்சு மரணம்’ என்று வைரலாக்கி தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சாரா அலிகான் பாலிவுட் முன்னணி நடிகரான சயிஃப் அலிகான் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.