தனியார் மயப்படுத்தப்பட்ட கல்வி வியாபாரம் ஆகிறது, அதனால் ஏழை மாணவர்களுக்கு கல்வி கிடைப்பதில் உருவாகும் சிக்கல், இதை தீர்க்க வரும் ஒரு வாத்தியாரின் கதையே ‘வாத்தி’.
90 காலகட்டங்களில் பல தொழிகள் தனியார் மயமாவதைப் போல, கல்வி மாதிரியான சேவையும் தனியார்மயம் ஆக்கப்படுகிறது. பல பிரைவேட் ஸ்கூல், கோச்சிங் சென்டர்கள் உருவாகிறது. அப்படியான பல தனியார் பள்ளிகளின் குழுவுக்கு தலைவர் திருப்பதி (சமுத்திரக்கனி). தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வால், ஏழைகளுக்கு கல்வி தடைபடுகிறது. பெற்றோர்களும் தனியார் பள்ளிகளை நாட, அரசுப்பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது. இதனை மாற்ற, தனியார் பள்ளிகளுக்கான கட்டண அளவை அரசாங்கம் வரைமுறைப்படுத்தி, அரசுப்பள்ளிகளுக்கு போதிய ஆசிரியர்களை நியமிக்க நினைக்கிறது. அதைத் தடுக்கும்படியாக புதுத்திட்டத்தை கையில் எடுக்கிறார் திருப்பதி. தன்னுடைய பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை அரசாங்கப் பள்ளிகளுக்கு அனுப்பி மாணவர்களுக்கு கல்வி வழங்குகிறோம் என அறிவிக்கிறார்.
இதனால் தன்னுடைய வியாபாரமும் பாதிக்காது, கூடவே மூன்றாம் நிலையில் உள்ள ஆசிரியர்களை அனுப்புவதால் மாணவர்களின் கல்வியில் பெரிய முன்னேற்றமும் இருக்காது என்பது அவரது மறைமுக எண்ணம். திருப்பதி பள்ளியில் பணியாற்றும் பாலா (தனுஷ்) சோழவரம் அரசுப்பள்ளிக்கு கணித ஆசிரியராக அனுப்பப்படுகிறார். ஆனால் அங்கே மாணவர்களே இல்லாமல் காலியாக இருக்கும் பள்ளிக் கூடமும், சாதி ரீதியாக பிரிந்துகிடக்கும் ஊரையும் பார்க்கிறார். இதை எல்லாம் சரி செய்ய பாலா என்ன திட்டம் போடுகிறார்? இதற்கு வரும் தடைகள் என்ன? இதை எல்லாம் அவர் எப்படி? கடைசியில் எப்படி ஜெயிக்கிறார்? என்பதெல்லாம் தான் படத்தின் மீதிக்கதை.
படத்தின் நிறைகள்
ஒரு கமர்ஷியல் படத்திற்கான எந்த காரணியையும் மிஸ் பண்ணாமல், அதை வைத்து கல்வியைப் பற்றி பேசியிருக்கும் இயக்குநர் வெங்கி அட்லூரியின் முயற்சி. அது இந்தப் படத்தை வழக்கமான ஒரு டெம்ப்ளேட் சினிமாவாக மாற்றினாலும், எந்த இடத்திலும் பெரிதாக போர் அடிக்காமல் படம் நகர உதவுகிறது. கல்வி என்றாலே இங்கு சரஸ்வதியுடன் ஒப்பிடப்படும். ஆனால் அந்தக் கல்வி வியாபாரமாக மாற்றப்படுகிறது. அதுவே கலெக்ஷன், வியாபாரம் என இருக்கக் கூடிய ஒரு தியேட்டர் (லக்ஷ்மி டாக்கீஸ்), ஒரு கல்வி மையமாக மாறுகிறது. இந்த மாதிரி சில டைட்டிங் ஐடியாக்கள் ரசிக்கும்படி இருந்தது. படத்தின் அடுத்த பெரிய பெரிய பெரிய பலம், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை. படத்தின் பல காட்சிகள் மிக பலவீனமாக இருக்கும் போது, பழையதாக இருக்கும் போதும் கூட அவர் கொடுத்திருக்கும் பின்னணி இசை மூலம் மட்டுமே உயிர் கொடுக்கிறது. கூடவே பல மாஸ் காட்சிகளும் அவரது இசையால் மட்டுமே சாத்தியமாகிறது.
அடுத்தது தனுஷின் நடிப்பு. பஞ்சாயத்து காட்சியில் அவர் கதை சொல்லும் காட்சி, வகுப்பறையில் சாதி பிரச்சனை பற்றி பேசும் காட்சி, எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் உடைந்து போகும் காட்சி என அனைத்திலும் சிறப்பான நடிப்பைக் கொடுக்கிறார். சமுத்திரக்கனிக்கு ஒரு டிபிக்கல் வில்லன் வேடம். இன்னும் சொல்லப்போனால், அவரது ‘சாட்டை’ படத்தில் தம்பி ராமையா ஏற்றிருந்தது போல் ஒரு வேடம். அதை எந்த அலட்டலும் இல்லாமல் நன்றாக நடித்திருக்கிறார். இவர்கள் தவிர சம்யுக்தா, சாய்குமார், நரேன், தனிகெலா பரணி போன்ற துணை கதாபாத்திரங்களும் தங்களது நடிப்பை அளவாக கொடுத்திருக்கிறார்கள்.
படத்தின் குறைகள்
இதிலும் தனுஷின் நடிப்பைப் பற்றி சொல்ல வேண்டும். இசை வெளியீட்டு விழாக்களில் ரஜினியை இமிடேட் செய்வது கூட ஓகே. ஆனால் படத்திலும் அதை அவர் தொடர்வது பார்க்கும்படி இல்லை. சமீபத்தில் வெளியான அவரின் ‘திருச்சிற்றம்பலம்’ போன்ற பல படங்களில் ஒரு ஒரிஜினல் பர்ஃபாமன்ஸைக் கொடுக்கும் அவர், கமர்ஷியல் படங்களில் மட்டும் ஏனோ ரஜினியை நகலெடுக்க முயற்சிக்கிறார். அடுத்த படங்களில் தனுஷ் இதை சரிசெய்து கொள்ள வேண்டும். அடுத்த குறை இது, தமிழ் படம் என தெரிவதற்காக சில க்ளோஸ் அப் காட்சிகளிலும், ஆங்காங்கே இருக்கும் பலகைகளில் மட்டுமே தமிழ் இருக்கிறது. மற்றபடி தமிழில் டப்பிங் மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது. படத்தின் பெரும்பான்மைக் காட்சிகளாகட்டும், வாத்தி பாடலாகட்டும் எதிலும் லிப் சிங் இல்லாமல் அப்பட்டமாக ஒரு தெலுங்குப் படம் எனத் தெரிகிறது.
லாஜிக்காக யோசித்தாலும், படம் ஆரம்பமாகும் போது, ஒரு சில மாணவர்கள் தனுஷை தேடி புறப்படுவார்கள். அவர்கள் அப்படி செல்வதற்கான காரணம் வலுவாக இல்லை. ஒரு தனியார் பள்ளிகளுக்கான கூட்டமைப்பின் தலைவர், அரசாங்கத்தின் திட்டங்கள் வரை முடிவு செய்யும் வல்லமை பெற்றிருக்கிறார் அதெப்படி?. படத்தை கமர்ஷியல் ஆக்குவதற்காக, சேர்த்த மசாலாவில் படத்தின் கருத்து நீர்த்துப் போகிறது. கூடவே அரசாங்க ஊழியர்கள் என்றாலே வேலை செய்ய மாட்டார்கள், தூங்கிக் கொண்டிருப்பார்கள் என்ற பொதுப்புத்தியுடன் காட்சிகள் வைத்திருப்பதும் தவறான சித்தரிப்பு. கல்வி தனியார்மயம் ஆவதைப் பற்றிய கரு என்பதில் இருக்கும் அழுத்தம், படத்தில் எங்கும் இல்லை. அதன் பிரச்சனைகள் எதையும் பற்றி பேசாமல், ஆம் கல்வி வியாபாரம் ஆகிவிட்டது. இனி நாம் தான் அதற்கு தகுந்தது மாதிரி வளைந்து கொடுத்து செல்ல வேண்டும் எனப் படத்தை முடித்த விதமும் பெரிய நெருடல்.
மொத்தத்தில் கல்வி என்ற ஒரு சீரியசான விஷயத்தை எடுத்து, அதை பொழுதுபோக்குடன் சொல்லியிருக்கிறது படம். ஆனால், அதன் சரியான புரிதல் இல்லாமல் மேம்போக்காக எடுக்கப்பட்டிருப்பதால் வெறும் மசாலா படம் என்ற அளவிலேயே நின்று விடுகிறார் இந்த ‘வாத்தி’.