நடிகர் தனுஷின் ‘வாத்தி’ திரைப்படம் ரூ. 100 கோடி வசூலித்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துப் போஸ்டர் வெளியிட்டுள்ளது.
தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில், தனுஷின் நடிப்பில் தமிழில் ‘வாத்தி’ என்றும், தெலுங்கில் ‘சார்’ எனவும் உருவான இந்தத் திரைப்படம், கடந்த 17-ம் தேதித் திரையரங்குகளில் வெளியானது. கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் ஆகிய திரையுலகில் கால்பதித்து வெற்றிக்கரமான படங்களைக் கொடுத்த நிலையில், தனுஷின் முதல் நேரடித் தெலுங்கு திரைப்படமாக ‘சார்’ உருவாகியிருந்தது. விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் தெலுங்கு ரசிகர்களின் கவனத்தைப் பெரிதாக ஈர்க்காத நிலையில், தனுஷின் ‘சார்’ திரைப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்துக் காணப்பட்டது.
மேலும், தெலுங்கு இயக்குநர் அனூதீப் இயக்கிக் கடந்த ஆண்டு வெளியான சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படமும் வெற்றிக்கரமானப் படமாக வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமையவில்லை. இதனால், தெலுங்குத் திரையுலகில் இருந்து வந்த வெங்கி அட்லூரியின் ‘வாத்தி’ திரைப்படம் எப்படி இருக்கும் என்று காத்திருந்த நிலையில், கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் 15 நாட்களில் 100 கோடி ரூபாய் ‘வாத்தி’ திரைப்படம் வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டெர்டெயின்மெண்ட் தெரிவித்துள்ளது.
குறிப்பாகத் தமிழ்நாடு மற்றும் தெலுங்கில் கிட்டத்தட்ட சமஅளவில் ‘வாத்தி’ திரைப்படம் வசூலித்துள்ளது. அதன்படி, 33.5 கோடி ரூபாய் முதல் 36 கோடி ரூபாய் வரையிலும், தெலுங்கில் 32.18 கோடி ரூபாயும் இந்தப் படம் வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் 21 முதல் 23 கோடி ரூபாய் வரையிலும், கர்நாடகா மாநிலத்தில் 7.45 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தனுஷின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த நிலையில், அடுத்ததாக இந்தப் படம் அந்த வரிசையில் இணைந்துள்ளது.