உணவு டெலிவரி செய்யும் ஊழியர் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்து நாளை வெளியாக உள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை வரவேற்கும் வகையில் நெல்லை மாவட்ட தனுஷ் ரசிகர்கள் ஸ்விகி, சொமோட்டோ உள்ளிட்ட உணவு டெலிவரி செய்யும் நிறுவன ஊழியர்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கினர்.
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் உடன் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர்.
7 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் தனுஷ் படத்திற்கு அனிரூத் இசைமைத்துள்ளார். நடிகர் தனுஷ் நடித்து பிரம்மாண்ட வெற்றி கண்ட கர்ணன் படத்தை தொடர்ந்து, ஓராண்டுக்குப் பிறகு தனுஷ் நடிப்பில் உருவான திருச்சிற்றம்பலம் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கடந்த ஆண்டில் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம், மாறன், அத்ராங்கி ரே, தி கிரே மேன் ஆகிய 4 படங்கள் ஓ.டி.டி. தளங்களில் நேரடியாக வெளியானது. தற்போது நேரடியாக திரையரங்கில் வெளியாக இருக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் பல்வேறு வழிகளில் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றத்தினர் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை வரவேற்று திரையரங்களில் பிளக்ஸ் போர்டுகள் மற்றும் கட்டவுட்டுகளை வைத்து வருகின்றனர்.
மேலும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடிகர் தனுஷ் உணவு டெலிவரி செய்யும் ஊழியராக நடித்து அவர்கள் படும் கஷ்டங்களை திரையில் காட்டியுள்ளார். எனவே திருச்சிற்றம்பலம் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களை கௌரவிக்கும் விதமாக நெல்லை மாவட்ட தனுஷ் ரசிகர் மன்ற தலைவர் காமராஜ் தலைமையில் தனுஷ் ரசிகர்கள் ஸ்விக்கி மற்றும் சுமோட்டா போன்ற உணவு டெலிவரி நிறுவனங்களில் பணி செய்யும் சுமார் 50 நபர்களுக்கு தலா ஒரு லிட்டர் பெட்ரோல் வீதம் வழங்கி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.