காளி ஆவண திரைப்படத்தின் இயக்குநர் லீனா மணிமேகலை நேரில் ஆஜராகுமாறு டெல்லி உயர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
செங்கடல், மாடத்தி போன்ற ஆவண திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் லீனா மணிமேகலை கடந்த ஜூலை 2ஆம் தேதி இந்து கடவுளான காளி ஒரு கையில் தன்பாலின சேர்க்கையாளர் கொடியும், மற்றொரு கையில் சிகரெட்டுடனும் நிற்பதுபோல "காளி" எனும் ஆவண திரைப்பட போஸ்டரை வெளியிட்டார். இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில் டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜ் கௌவுரவ் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு இன்றைய தினம் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி அபிஷேக் குமார் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரரன வழக்கறிஞர் ராஜ் கௌவுரவ், இந்து கடவுளை கூறமுடியாத அளவிற்கு லீனா மணிமேகலை சித்தரித்து உள்ளதாகவும், படத்தின் போஸ்டரில் கடவுள் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இவை இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாகவும் வாதத்தை முன் வைத்தார். அப்போது நீதிபதி அபிஷேக் குமார் வழக்கு தொடர்பாக வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு காளி திரைப்படத்தின் இயக்குநர் லீனா மணிமேகலை மற்றும் அவரின் தயாரிப்பு நிறுவனமான டூரிங் டாக்கீஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கும் சம்மன் அனுப்பி உத்தரவிட்டார்.