ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு பல போராட்டங்களுக்கு இடையே பெண்களுக்கு முன்னுதாரணமாக மாறிய லக்ஷ்மி அகர்வாலின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் ‘சபாக்’.
பிரபல பாலிவுட் திரைப்பட பாடலாசிரியர் குல்சார் - ராக்கி தம்பதியின் மகள் மேக்னா குல்சார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை அவரும் தீபிகா படுகோனும் தயாரித்துள்ளனர். ‘சபாக்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான போதே, ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. அதற்கு கொஞ்சம் கூட குறை வைக்காமல் தீபிகா படுகோனின் நடிப்பு மற்றும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
ஆசிட் அடித்த நிலையில் கண்ணாடியில் முகத்தை பார்க்கும்போது தீபிகா படுகோன் அழும் காட்சி ரசிகர்களை திரையரங்குகளில் கண் கலங்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. வரும் ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. ட்ரெய்லர் திரையிடப்பட்டதன் பின்னர் மேடை ஏறிய தீபிகா படுகோன் மனமுடைந்து அழுதார். மிகவும் ஆத்மார்த்தமாக நடித்துள்ளதால் அனைவருக்கும் சபாக் நிச்சயம் பிடிக்கும் என்றும் தீபிகா படுகோன் கண்ணீரை அடக்கிக்கொண்டே தெரிவித்தார்.
நிஜ சம்பவங்களின் அடிப்படையில் வெளியாகும் திரைப்படங்கள் என்றால் அதனை தெரிந்துகொள்ள ஆர்வம் மக்களுக்கு அதிகம் இருக்கும். அந்த வகையில் லக்ஷ்மி அகர்வாலின் வாழ்க்கை பயணத்தை தீபிகா படுகோன் பூர்த்தி செய்யும் வகையில் நடித்துள்ளார்.