வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், சினேகா, மோகன், பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் திரையரங்குகளில் நேற்று வெளியானது. இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் எண்டெர்டெயிண்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் கொண்டாட்டத்துடன் வெளியான இத்திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வரும் வேளையில், திரைப்பட விமர்சகர்கள் கலவையான விமர்சனங்களையே கொடுத்து வருகின்றனர். திரைப்படம் நேற்று வெளியான நிலையில், அதற்கான டீகோடிங்களுக்கும் பஞ்சமில்லை.
We Miss You Captain என்று உருகி, விஜயகாந்தை ஏ.ஐ. மூலம் உருவாக்கி, 'GOAT' படத்தின் முதல் காட்சியிலேயே வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு. இதே விஜயகாந்த் நடிப்பில், 'GOAT' நாயகன் விஜய்யின் தந்தை S.A. சந்திரசேகரன் இயக்கத்தில், 1993-ல் வெளியான 'ராஜதுரை' திரைப்படத்தின் கதையை அப்படியே பயன்படுத்தி 'GOAT' திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் வெங்கட் பிரபு என ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.
சிறப்புத் தோற்றத்தில் வரும் சிவகார்த்திகேயன் குறித்த காட்சிகளையும் டீகோட் செய்து, நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அனைத்தையும் தாண்டி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், ஆல் ஏரியாவுலயும் அய்யா கில்லி என்பதுபோல்தான் வசூல் வேட்டையை நிகழ்த்தி வருகிறது GOAT.
GOAT திரைப்படம் நேற்று (செப் 5) வெளியான நிலையில், இந்திய அளவில் 76.23% திரையரங்களில் திரையிடப்பட்டது. தமிழில் மட்டுமல்ல, மற்ற மொழிகளில் கூட போட்டியாக பெரிய திரைப்படங்கள் வெளியாகாதது GOAT திரைப்படத்திற்கு பாசிட்டிவாக பார்க்கப்பட்டது. இந்நிலையில்தான் முதல் நாளில் மட்டும், GOAT திரைப்படம் உலகளவில் ரூ.126.32 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இதை தயாரிப்பு நிறுவனமே உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக பாக்ஸ் ஆபீஸ் இணையதளங்களில், உலகளவில் GOAT திரைப்படம் ரூ.100.75 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் வெளியான விஜய்யின் லியோ திரைப்படம், முதல் நாளில் இந்திய அளவில் மட்டும் ரூ.64.8 கோடி ரூபாயை வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.