ஒரு படத்தின் நஷ்டத்தை மற்றொரு படத்தின் மூலம் அஜித் ஈடுகட்டியது போல், ரஜினியும் செய்ய வேண்டும் என ‘தர்பார்’ பட விநியோகஸ்தர் திருவேங்கடம் தெரிவித்துள்ளார்.
ரஜினி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த பொங்கலுக்கு வெளியான திரைப்படம் ‘தர்பார்’. இப்படம் அதிக வசூலை ஈட்டியதாக கூறப்பட்டாலும், தங்களுக்கு பெரும் நஷ்டமே என விநியோகஸ்தர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தர்பார் பட விநியோகஸ்தர் திருவேங்கடம் புதிய தலைமுறையிடம் பேசுகையில், “கண்டிப்பாக தர்பார் படம் தோல்விதான். 40 சதவிகிதம் நஷ்டமடைந்த படம் எப்படி வெற்றிப்படமாக இருக்க முடியும். தயாரிப்பாளர்கள் தங்களுடைய நிலையை பாதுகாத்துக்கொள்ள அதிக சம்பளம் கொடுப்பதாக, ரஜினி போன்ற பெரிய நடிகர்களிடம் கூறுகின்றனர். படம் ஓடவில்லை என்றால், இதனால் பாதிக்கபடுபவர்கள் யார் என்று ரஜினி சிந்தித்து பார்க்க வேண்டும்.
அதைதான் நான் ரஜினியிடம் நேரிடையாக சொல்ல விரும்புகிறேன். தயாரிப்பாளர்கள் - நடிகர்கள் என்ற நிலையை மட்டும் பார்க்காமல் சினிமா ஒட்டுமொத்தமாக மக்களிடம் சென்று சேரும்போது என்ன நடக்கும் என சிந்திக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற பிரச்னைகள் வராது. மக்கள் கொடுக்கும் டிக்கெட் விலையே, படம் வெற்றியா? தோல்வியா? என்பதை நிர்ணயிக்கும். லாபத்தை தயாரிப்பாளர்களிடமே எப்படி முடிவு செய்கிறீர்கள். ‘நான் நடித்துக்கொடுத்தேன். சம்பளம் வாங்கிட்டேன்னு’ போவதை ரஜினியிடம் நாங்கள் எதிர்ப்பார்க்கவில்லை.
சின்ன நடிகர்கள் படத்திலும் நஷ்டம் அடைந்துள்ளோம். ஆனால் அவர்கள் அதை அடுத்தப்படத்தில் சரிசெய்து கொடுக்கிறார்கள். ‘விவேகம்’ படம் நஷ்டம்தான். அதன்பிறகு ‘விஸ்வாசம்’ படத்தை அஜித் அதே தயாரிப்பாளருக்கு கொடுத்தார். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை விதித்தார். அதாவது, இந்த படத்தை விவேகம் படத்தை வாங்கிய அதே விநியோகஸ்தர்களுக்கு அதே விலைக்கு கொடுங்கள். லாப விலைக்கு கொடுக்காதீர்கள் என நிபந்தனை விதித்தார். விஸ்வாசம் படம் மூலம் விவேகத்தின் நஷ்டம் ஈடுசெய்யப்பட்டது.
இதுபோன்று ரஜினியும் நடந்து கொள்ள வேண்டும். இதுமட்டுமல்லாமல் சினிமாத்துறையின் சிஸ்டத்தை சரிசெய்ய ரஜினி ஈடுபாடு காட்டவேண்டும். அவர் நினைத்தால் முடியும். அவர் சொன்னால், பின்னால் வருபவர்கள் கேட்டுக்கொள்வார்கள். திரைத்துறையில் மிகப்பெரிய அனுபவத்துடன் இருப்பவர் ரஜினிதான். டிக்கெட் விலை உயர்வுக்கு ஏற்ப சம்பளத்தை உயர்த்தினால் எங்களுக்கு நஷ்டம் வராது. ஆனால் பல மடங்கு உயர்த்தி கொடுப்பதினால்தான் நஷ்டம் ஏற்படுகிறது” எனத் தெரிவித்தார்.