மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த பெருமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை கொட்டித்தீர்த்தது. குடியிருப்பு பகுதிகளில் நீர் புகுந்ததில் வாகனங்கள், உடமைகள் சேதமடைந்தன.
பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு வெகுவாக திரும்பி வருகின்றனர். சென்னையில் குவிந்திருக்கும் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணி 15 மண்டலங்களிலும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஆவின் பால் விற்பனை சீரானதாகவும், உணவு சமைத்து விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும், மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலரும் தங்களால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்காக செய்து வருகின்றனர். திரைப்பிரபலங்களும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, நிவாரணப் பணிகளுக்காக பண உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து ரூ.10 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். இது குறித்து அமைச்சர் உதயநிதி பதிவிட்டுள்ள பதிவில், “மிக்ஜாம் புயல் – கன மழையைத் தொடர்ந்து கழக அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை இடைவிடாது மேற்கொண்டு வருகிறது. நம் அரசின் இந்த முயற்சிக்கு துணை நிற்கிற விதமாக, நிறுவனங்கள் – இயக்கங்கள் - தனிநபர்கள் என பலரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு நிதியளித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று நம்மை சந்தித்த போது, நடிகர் – சகோதரர் சிவகார்த்திகேயன், ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக நம்மிடம் வழங்கினார். அவருக்கு அன்பும் - நன்றியும். ஒன்றிணைந்து செயல்படுவோம் - இயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட துயர் துடைப்போம்!” என பதிவிட்டுள்ளார்.