திரைப்படத்தின் மீதான திரைவிமர்சனங்கள் அளவு மீறி போனால் ஆபத்தே. இருக்கிறதை இருப்பதாக கூறினால் பரவாயில்லை இல்லாத ஒரு விஷயத்தை மிகைப்படுத்தி கூறும் போது பாதிப்பு என்பது அதன் உரிமையாளருக்கே என்பதை உணர வேண்டும். இப்படி செய்வது நன்றாக வசூலாகும் திரைப்படத்தை கூட மோசமாக பாதிக்கும் வண்ணம் உள்ளது. அதன் பின்புறம் உழைத்த ஏராளமான மக்களின் வாழ்க்கை என்று நினைத்தால் வீண் விமர்சங்களை தவிர்க்கலாம்.
இந்தவகையில் Rahel Makan Kora என்ற மலையாள படத்தின் இயக்குநர் உபைனி என்பவர், திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை பாதிக்கும் வகையில் மிகவும் மோசமாக திரைவிமர்சனம் வழங்கியதாக ஏழு யூடியூபர்கள் மற்றும் வோல்கர்கள் மீது புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ”கொச்சியைச் சேர்ந்த சினிமா தயாரிப்பு நிறுவனமான ஸ்னேக் பிளாண்ட் உரிமையாளர் ஹெய்ன்ஸ் என்பர் இதன் முதல் குற்றவாளி. ஃபேஸ்புக் பயனர் 'anoopanu6165', யூடியூபர்கள் அருண் தரங்கா மற்றும் அஸ்வந்த் கோக் மற்றும் யூடியூப் சேனல்களான NV Focus மற்றும் Trend Sector 24X7 இன் ஆபரேட்டர்கள், ‘soulmates55’ போன்றவர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
”இவர்கள் இயக்குநர் உபைனியை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டதாகவும் யூட்டூப் மற்றும் ஃபேஸ்புக்கில் அவருக்கு எதிராக ஆட்சேபகரமான மற்றும் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி 2-7 எதிர்மறையான வீடியோக்களை Rahel Makan Kora திரைப்படம் வெளியான அக்டோபர் 3 ஆம் தேதியே பதிவிட்டுள்ளனர். மேலும் இது குறித்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஹெய்ன்ஸ் என்பவர் இவரை அச்சுறுத்தியதாக தெரிவித்தார்” என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
திரைப்பட தயாரிப்பாளரான என்.எம்.பாதுஷா இது குறித்து கூறுகையில், “காவல்துறையின் நடவடிக்கையை நான் முழுமனதுடன் ஏற்றுக் கொள்கிறேன். இந்த மாதிரியான யூடியூபர்களால் கொடுக்கப்படும் பல எதிர்மறையான விமர்சங்கள் மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. எனது வெடிகெட்டு திரைப்படம் கூட இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. நாங்கள் திரை விமர்சனத்திற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் இது போன்ற சில யூடியூபர்க அத்திரைப்படத்தில் நடிக்கும் நபர்களையும் தங்களது வீடியோக்கள் மூலமாக அவதூறாக பேசுகின்றனர். இது ஒரு ஆரோக்கியமற்ற நடவடிக்கையாகும்” என்று கூறினார்.
கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எம்.ரஞ்சித் இது குறித்து கூறுகையில், “ நாங்கள் ஒரு நபரின் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானவர்கள் கிடையாது. திரைப்படத்தை பற்றிய விமர்சங்களை, திரைப்படம் வெளியான ஒரு வாரத்திற்கு பிறகு ஆரம்பிக்கலாம். அந்தபடத்தில்தான் அதில் உழைத்த ஆயிரக்கணக்கான மக்களின் உழைப்பும் முயற்சியும் அடங்கியுள்ளது.அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்பதற்காக அவர்களின் வாழ்க்கையை பாழாக்குவது என்பது பாராட்டுக்குரியது அல்ல” என்று தெரிவித்தார்.