"அஜித் தேர்தலில் வாக்களிக்காததற்கு கொரோனா பரவலே காரணம்” என்று கூறியுள்ளார் டி.ராஜேந்தர்.
கோடம்பாக்கம் மண்டலம் தி.நகர் பகுதியில் 117 வது வார்டில் இந்தி பிரச்சார சபாவில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் வாக்களித்தார். ’நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திரைப் பிரபலங்கள் பலர் வாக்களிக்காதது ஏன்?’ என்ற கேள்விக்கு பதிலளித்துப் பேசினார்.
”சிம்பு ’வெந்து தணிந்தது காடு’ மற்றும் தனியார் விளம்பர படபிடிப்பின் காரணமாக மும்பையில் உள்ளதால் வாக்கு செலுத்த இயலவில்லை. இருந்தபோதிலும் தொடர்பு கொண்டு ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று கூறினேன். ஒரு வாக்கும் வீணடிக்க வேண்டாம் என்றும் தெரிவித்தேன்.
அதுபோல, நடிகர் அஜித் இத்தனை தேர்தலில் வாக்களித்து இந்தத் தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பதற்கு கொரோனோ என்ற நோய் ஒன்றே காரணம். ஏன் பொங்கலன்று அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் வெளியாகவில்லை. எல்லாத்துக்கும் இந்த நோய் மட்டுமே காரணம். இந்த நோயை வைத்து சினிமாக்காரர்களை பயமுறுத்துகிறார்கள்” என்று கூறினார்.