எம்.ஜி.ஆர், தோனி படங்கள் இடம்பெற்றுள்ள போஸ்டர்களை விஜய் ரசிகர்கள் மதுரையில் ஓட்டியுள்ளனர்.
மதுரையில் விஜய் ரசிகர்கள் அடுத்தடுத்து பல விதங்களில் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். குறிப்பாக நடிகர் விஜயின் ரசிகர்கள் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு விஜயை அழைக்கும் விதமாகவும், மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட முதல்வருக்கு கோரிக்கை வைத்தும் போஸ்டர்களை ஒட்டி வந்தனர்.
இந்நிலையில், நடிகர் விஜயை எம்.ஜி.ஆர் போலவும், அவரது மனைவி சங்கீதாவை ஜெயலலிதா போலவும் சித்தரித்து ஒட்டிய போஸ்டர்கள் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் கடம்பூர் ராஜூ ஆகியோர் நடிகர் விஜய் ஒருபோதும் எம்.ஜி.ஆராக ஆக முடியாது என விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில், எம்.ஜி.ஆர் படத்துடன் விஜய் ரசிகர்களால் மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. அதில் எம்.ஜி.ஆரின் நல்லாசியுடன் இனி வரும் அரசியலில் தமிழகத்தின் சட்டமன்றமே, இந்தியாவின் பாராளுமன்றமே எனவும், மழலைகள் முதல் மந்திரிகள் வரை மாஸ்டர் பார்க்க ஏக்கம், 2021ல் மாற்றம் அமைய இதுவே நல்ல தொடக்கம் எனவும், அதனைத்தொடர்ந்து கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் நடிகர் விஜயை இணைத்து, தோனியை இந்தியாவின் புகழ் மன்னன் எனவும், விஜயை தமிழகத்தின் சி.எம் அதாவது கலெக்ஷன் மன்னன் எனவும் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் அரசியல் அரங்கில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.