பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உயிரிழந்ததற்கு இசையமைப்பாளர் இளையராஜா உருக்கமான வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.பி மரணம் தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள இளையராஜா, “பாலு சீக்கிரம் எழுந்து வா, உன்ன பார்க்க காத்திருக்கேன்னு நான் சொன்னேன். கேக்கல நீ.. கேக்காம போய்ட்ட.. எங்க போன. கந்தர்வர்களுக்காக பாட போயிட்டியா.
இங்க உலகம் சூன்யமா போச்சு. உலகத்துல ஒன்னும் எனக்கு தெரியல. பேசுறதுக்கு பேச்சு வரல. சொல்றதுக்கு வார்த்தையில்ல. என்ன சொல்றதுன்னே தெரியல. எல்லாத் துக்கத்துக்கும் ஒரு அளவு இருக்கு. இதுக்கு அளவில்ல” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பி கடந்த மாதம் 5ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் உடல்நலம் தேறியது.
இந்நிலையில் எஸ்.பி.பியின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளதாக நேற்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இரவு முழுவதும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தார். மருத்துவ வல்லுநர்கள் தீவிரமாக முயற்சி செய்தும், சிகிச்சை பலன் அளிக்காததால் எஸ்.பி.பியின் உயிர் பிரிந்தது. அவரது மறைவிற்கு பிரபலங்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.