நடிகர் வடிவேலு மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இரண்டு தயாரிப்பாளர்கள் பரபரப்பு புகார் கொடுத்துள்ளனர்.
’எல்லாம் அவன் செயல்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஆர்.கே. அடுத்து, ’அழகர் மலை’, ’புலிவேஷம்’, ’என் வழி தனி வழி’, ’வைகை எக்ஸ்பிரஸ்’ படங்களில் ஹீரோவாக நடித்த அவர், ‘நீயும் நானும் நடுவுல பேயும்’ என்ற படத்தை தயாரிக்க இருந்தார். இதை, ’தண்ணில கண்டம்’ எஸ்.என். சக்திவேல் இயக்குவதாக இருந்தார். ஆர்.கே.யின் ‘மக்கள் பாசறை’ தயாரிக்க இருந்தது. இதில், ’எல்லாம் அவன் செயல்’ ‘அழகர் மலை’ ஆகிய படங்களில் வடிவேலுவுடன் சேர்ந்து நடித்திருந்தார் ஆர்.கே. இந்தப் படங்களின் காமெடி சூப்பர் ஹிட்டானதால், ’நீயும் நானும் நடுவுல பேயும்’ படத்துக்கும் வடிவேலுவை ஒப்பந்தம் செய்திருந்தார் ஆர்.கே.
இதற்கு அவருக்கு சம்பளமாக ரூ.75 லட்சம் பேசப்பட்டு கொடுக்கப்பட்டது. படத்தின் அறிவிப்பும் வெளியானது. ஆனால், படத்தின் கதையை கேட்ட வடிவேலு, ’இதை இப்படி மாற்றலாம், அப்படி மாற்றலாம்’ என்று கொஞ்சம் கொஞ்சமாக மொத்தக் கதையையுமே மாற்றிவிட்டாராம். இதையடுத்து படப்பிடிப்புக்கு வருவதாகச் சொன்ன வடிவேலு, அதற்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து தயாரிப்பாளர் ஆர்.கே. தயாரிப்பாளர் சங்கத்தில் வடிவேலு மீது புகார் தெரிவித்துள்ளார்.
இதே போல ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் ஒன்றில் வடிவேலு நடிக்க இருந்தார். இதை ’தில்லுக்கு துட்டு’ படத்தை இயக்கிய ராம் பாலா இயக்க இருந்தார். ஸ்டீபன் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதிலும் படத்தின் கதையை வடிவேலு மாற்றிவிட்டாராம். இதனால் அந்தப் படம் டிராப் ஆகியுள்ளது. வடிவேலுவால் அதிக நஷ்டம் அடைந்துள்ளதாக தயாரிப்பாளர் ஸ்டீபன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கூறியுள்ளார்.
நடிகர் வடிவேலு நடிக்கும் ’இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தை டைரக்டர் ஷங்கர் தயாரிக்க இருந்தார். சிம்புதேவன் இயக்க இருந்த இந்தப் படம் தொடக்க நிலையிலேயே பிரச்னையை சந்தித்தது. இதனால் படத்துக்குப் பல கோடி ரூபாய் செலவில் போடப்பட்ட, செட் வீணானது. இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் இயக்குனர் ஷங்கர் ஏற்கனவே புகார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.