‘3 சகோதரர்கள், 6 ஹீரோயின்கள், யோகிபாபுவுக்கு ஸ்டைலிஷான ரோல்’ -சுந்தர் சி பகிர்ந்த சீக்ரெட்

‘3 சகோதரர்கள், 6 ஹீரோயின்கள், யோகிபாபுவுக்கு ஸ்டைலிஷான ரோல்’ -சுந்தர் சி பகிர்ந்த சீக்ரெட்
‘3 சகோதரர்கள், 6 ஹீரோயின்கள், யோகிபாபுவுக்கு ஸ்டைலிஷான ரோல்’ -சுந்தர் சி பகிர்ந்த சீக்ரெட்
Published on

சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகி பாபு, மாளவிகா ஷர்மா, ரைசா வில்சன், அம்ரிதா, ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா, திவ்யதர்ஷினி ஆகியோர் நடித்துள்ள படம் 'காஃபி வித் காதல்'. இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இயக்குநர் சுந்தர் சி, நடிகை குஷ்பு, நடிகர்கள் ஜீவா, ஜெய், நடிகைகள் மாளவிகா ஷர்மா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, அம்ரிதா, சம்யுக்தா, திவ்யதர்ஷினி, பாடலாசிரியர் சினேகன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, ரெட் ஜெயண்ட் செண்பகமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பேசிய சுந்தர் சி, "என்னுடைய படத்தின் விழாவுக்கு எப்போதுமே சிறப்பு விருந்தினர்கள் அழைத்ததில்லை. படத்தின் குழுதான் விருந்தினர்கள். இந்த ‘காஃபி வித் காதல்’, காமெடி, ஆக்‌ஷன் என எல்லாம் கலந்த படம் என சொல்ல ஆசைதான். ஆனால் இப்போதே படத்தை பற்றி அதிகமாக பேச வேண்டாம் என நினைக்கிறேன். எனக்கு எப்போதும் ஒரு ஃபீல் குட் படம் இயக்க வேண்டும் என விருப்பம்.

‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தைத் துவங்கிய போது ஒரே ஃபீல் குட் படமாக தான் துவங்கினேன். இளையராஜா இசைக்குழுவில் வயலின் வாசிக்கும் ஹீரோயின், அவளை காதலிக்கும் ஹீரோ என தான் கதை இருந்தது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் அப்போது முன்னணி நடிகையாக இருந்த நக்மாவை தான் ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அதற்கு ஏற்றது மாதிரி கதையைப் பிடிக்க, அது காமெடிப் படமாக மாறிவிட்டது. அதன்பிறகு `தீயா வேலை செய்யணும் குமாரு’ படம் துவங்கிய பொழுதும் ஒரு ஃபீல் குட் படம் இயக்க வேண்டும் என தான் துவங்கினேன். ஆனால் படத்திற்குள் சந்தானம் வந்த பிறகு, அதனுடைய கதையையும் காமெடியாக மாற்ற வேண்டி வந்தது.

ஆனால் இந்த முறை கண்டிப்பாக நான் விரும்பிய படத்தை விரும்பிய மாதிரியே எடுக்க நினைத்து முடித்திருக்கிறேன். படத்தில் மொத்தம் எட்டு பாடல்கள். எட்டு பாடல்கள் இருக்கிறது என்றால், அதை யுவன் இசையமைத்தால் தான் நன்றாக இருக்கும் என அவரிடம் சென்றேன். நல்ல பாடல்களைக் கொடுத்திருக்கிறார். இந்த மாதிரி ஒரு கதைக்கு விஷுவல்ஸ் மிக முக்கியம். அதற்காக ஊட்டி சென்றோம். அதுவும் படத்தில் ஒரு கதாபாத்திரம் போல இடம் பிடித்திருக்கிறது. இது ஒரு அருமையான பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது.

மூன்று சகோதரர்கள், மூவரும் ஒவ்வொரு விதம். அந்த மூவரின் வாழ்வில் காதல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும். அதை எப்படி கையாள்கிறார்கள் எனபதே படத்தின் கதை. படத்தில் மொத்தம் ஆறு ஹீரோயின்கள், அவர்கள் தான் கதையை நகர்த்திச் செல்வார்கள். இதில் யோகிபாபுவுக்கு ஒரு ஸ்டைலிஷான ரோல் கொடுத்திருக்கிறேன்.

பொதுவாக இந்த மாதிரி விழாக்களில் படத்தில் நடித்தவர்கள் பற்றி புகழ்ந்து சொல்வார்கள், ஒரு மாற்றத்திற்கு நான் ஒவ்வொருவரைப் பற்றியும் நெகட்டிவான விஷயங்களை சொல்கிறேன்.

சம்யுக்தா ஒரு நல்ல நடிகைதான். நான் எவ்வளவோ நடிகைகளுடன் பணியாற்றியிருக்கிறேன். ஆனால் சம்யுக்தா போன்று யாரும் பார்த்ததில்லை. ஏனென்றால், அவரை கண் சிமிட்டாமல் நடிக்க வைப்பது மிகப்பெரிய போராட்டம். ஒரே ஒரு காட்சியில் அவர் கண் சிமிட்டாமல் நடிக்க வைக்க ஒன்றரை மணி நேரம் கஷ்ட்டப்பட்டோம்.

ரைசாவுடன் பணியாற்றியது, கார்த்திக் சாருடன் வேலை பார்த்த மாதிரி இருந்தது. எப்போது செட்டை விட்டு கிளம்புவார் என்றே தெரியாது. செட்டுக்கு வந்தால் ஏதோ அட்ரஸ் கேட்க வந்த ஆள் போல தான் இருப்பார். ஆனால் நடிக்க ஆரம்பித்தால், சிறப்பாக நடிப்பார்.

அம்ரிதா, எப்போதும் ஒரு சந்தேகத்தோடே இருப்பார். நம்மை விட மற்றவர்களுக்கு அதிக காட்சிகள் எடுக்கப்படுகிறதா என்று.

மாளவிகா, பொதுவாக ஒரு ஆக்‌ஷன் படத்தில் ஹீரோவுக்கு அடிபடுவதை விட, இந்த ரொமான்டிக் படத்தில் ஹீரோயினுக்கு அடிப்பட்டிருப்பது மாளவிகாவுக்கு தான். ஒரு நாள் ஐ லைனரை கண்ணில் பட்டு கண்ணில் வீக்கத்தோடு வருவார். ஹீட்டர் சூடுபட்டு கையில் கொப்பளத்துடன் வருவார். மிக சிரமப்பட்டு நடித்திருக்கிறார்.

ஐஸ்வர்யா, ஒரு நடிகையிடம் இவ்வளவு எனர்ஜியா என குஷ்புவுக்குப் பிறகு நான் பார்த்து வியந்த நடிகை இவர் தான். பாடல் காட்சி எல்லாம் வந்து விட்டால் இவர் மட்டும் தனியாக ஆடிக் கொண்டிருப்பார்.

திவ்யதர்ஷினி, இந்தப் படம் கதையாக தோன்றியதில் இருந்து நிறைய நடிகர்களை மாற்றினோம். ஆனால் துவக்கம் முதல் இறுதிவரை திவ்யதர்ஷினி நடித்த பாத்திரத்திற்கு அவரைத் தவிர வேறு யாரையும் யோசிக்கவில்லை. படத்தில் எல்லா கதாபாத்திரங்களையும் இணைக்கும் ரோல்.

குழந்தை ரித்தி, இந்தப் படத்தின் ஹீரோ ஹீரோயினை முடிவு செய்வதை விட அதிகம் கஷ்டப்பட்டது இந்த குழந்தையின் ரோலுக்கு தான். இன்ஸ்டாவில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார். இந்தப் படத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

ஜீவா, ஜெய் பற்றி சொல்வதென்றால் என்னுடைய குடும்பத்து நபர்கள் பற்றி நானே பேசுவது போல் இருக்கும். ‘வின்னர்’ படத்திற்குப் பிறகு நானும் யுவனும் இணைந்து பணியாற்றுகிறோம். அப்போது எப்படி பழகினாரோ, இப்போதும் அதே அன்பு” இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com