மறைந்த நடிகர் சேதுராமனின் பிறந்த நாளான இன்று ஈ.சி.ஆரில், அவரது புதிய கிளினிக்கை திறந்து நட்புக்கு மரியாதை செய்துள்ளார், நடிகர் சந்தானம்.
’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் சேதுராமன். இவர், எம்.பி.பி.எஸ், எம்.டி முடித்த தோல் சிகிச்சை நிபுணரும் கூட. நடிகர் சந்தானத்துக்கு நெருங்கிய நண்பரான இவர், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தைத் தொடர்ந்து வாலிப ராஜா , சக்க போடு போடு ராஜா படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட துவக்கத்தில் டாக்டர் சேதுராமன் மாரடைப்பால் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அப்போது, இவரது மனைவி உமையாள் கர்ப்பிணியாக இருந்தார். கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதிதான் இத்தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ’இறந்த சேதுராமனே மகனாக பிறந்துள்ளார்’ என்று திரைத்துறையினரும் குடும்பத்தினரும் சந்தோஷத்தில் கொண்டாடினர். ஏற்கெனவே, இத்தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இறப்பதற்கு முன் நடிகர் சேதுராமன் ஈ.சி.ஆரில் தனது மருத்துவமனையின் கிளைக்கான பூஜை வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், இன்று அவரது பிறந்தநாளையொட்டி அந்தக் கிளினிக்கின் கிளையை நடிகர் சந்தானம் திறந்து வைத்துள்ளார். அந்தக் கிளினிக்கில் சேதுராமன் புன்னகைக்கும் ஆளுயர கட் அவுட்டுடன் சந்தானம் கைப்போட்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து “எனது அன்பு நண்பர் சேதுராமனின் கிளினிக்கை அவரது பிறந்தநாளில் தொடங்குவதில் மிகவும் மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.
சேதுராமன் இறந்தபோது கொரோனா சூழலிலும் இறுதிவரை உடன் இருந்தவர், அவரது நண்பர் சந்தானம் என்பது குறிப்பிடத்தக்கது.