திரையரங்கிற்குள் உணவு பொருட்களை கொண்டு செல்லலாமா? வேண்டாமா? - உச்சநீதிமன்றத்தின் உத்தரவு

திரையரங்கிற்குள் உணவு பொருட்களை கொண்டு செல்லலாமா? வேண்டாமா? - உச்சநீதிமன்றத்தின் உத்தரவு
திரையரங்கிற்குள் உணவு பொருட்களை கொண்டு செல்லலாமா? வேண்டாமா? - உச்சநீதிமன்றத்தின் உத்தரவு
Published on

திரையரங்குகளில் சுகாதாரமான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டும் என்றும், குழந்தைகளுடன் வரக்கூடிய பெற்றோர் வெளியில் இருந்து உணவை எடுத்துவர அனுமதி மறுக்கக்கூடாது எனவும், திரையரங்க உரிமையாளர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றம், திரையரங்க உரிமையாளர்கள், படம் பார்க்க வரக்கூடியவர்கள் வெளியிலிருந்து எடுத்து வரும் உணவுப் பொருட்களுக்கு அனுமதி மறுக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவிற்கு எதிராக அகில இந்திய திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் அமைப்பு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அப்போது பிரதான மனுதாரர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், திரைப்படம் பார்க்க வரக்கூடிய நபர்கள் ஒரு முறை பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி விட்டார்கள் என்றால் உணவை எடுத்து வருவதற்கு அனுமதி இல்லை என அந்த டிக்கெட்டில் தெரிவிக்கப்படாத வரை, உணவு பொருளை எடுத்து செல்ல தடை விதிக்க முடியாது என வாதிட்டனர். அதே நேரத்தில் திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், திரையரங்கம் என்பது பொது இடம் கிடையாது, எனவே அதற்குள் என்ன மாதிரியான விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது உரிமையாளர்களுடைய விருப்பத்தை பொறுத்தது என்ற வாதத்தை முன்வைத்தனர்.

வாதங்களை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “திரையரங்க உரிமையாளர்கள், திரையரங்கத்திற்கு உள்ளே உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்து வருவது தொடர்பான விதிமுறைகளை மற்றும் நிபந்தனைகளை உருவாக்க முழு உரிமை உள்ளது. அதேநேரம் திரைப்படம பார்க்க வருபவர்கள் அவற்றை சாப்பிடாமல் இருக்கவும் அவர்களுக்கு உரிமை உள்ளது. வெளி உணவுப் பொருட்களை திரையரங்கத்திற்குள் எடுத்து வரக்கூடாது என்பது திரையரங்க உரிமையாளர்களின் வர்த்தக ரீதியான முடிவு.

எனவே திரைப்படம் பார்ப்பவர் திரையரங்க விதிகளை கடைபிடிக்க வேண்டும்” என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், “ஒருவர் ஜிலேபியை வாங்கிக்கொண்டு திரையரங்கத்திற்குள் செல்கிறார், அவர் சாப்பிட்டுவிட்டு அங்கே இருக்கக்கூடிய நாற்காலியில் கைகளை துடைத்து அதனை கெடுத்து விடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்த தருணத்தில் திரையரங்க உரிமையாளர் அத்தகைய உணவை எடுத்து வர அனுமதி இல்லை எனக் கூற அவருக்கு உரிமை இருக்கிறது” என நீதிபதி கூறியுள்ளார்.

அதே நேரத்தில் தரமான சுகாதாரமான குடிநீர் என்பது இலவசமாக திரையரங்குகளில் வைக்கப்பட வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு பெற்றோர் உணவை எடுத்துச் செல்லும்போது திரையரங்குகள் ஆட்சேபனை தெரிவிக்க கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com