ஆண்டுதோறும் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (IIFA) விருது நிகழ்ச்சி இந்த ஆண்டு அபுதாபியில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு சர்வதேச IIFA சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்திய திரைத்துறைக்கு பல ஆண்டுகளாக மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கமல்ஹாசனுக்கு இந்த விருதை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கமல்ஹாசன், "மற்றவர்களுக்கு முன்பே ஓ.டி.டி. தளங்களின் வருகையை நான் முன்கூட்டியே கணித்துவிட்டேன். நாம் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அனைவரிடமும் கூறினேன். ஆனால், அப்போது என்னுடைய கருத்தை திரைத்துறை ஏற்கவில்லை. ஆனால் அன்று நான் சொல்ல முயற்சித்த விஷயத்தை இன்று அனைவருமே புரிந்து கொண்டுள்ளனர். இப்போது, இந்திய ரசிகர்களுக்கு சர்வதேச சினிமா ரசனை ஏற்பட்டுள்ளது.
நான் சிறிய படங்களின் தீவிர ரசிகன். ஏதோ பெரியதாக வளரும் குழந்தைகளைப் போல. இந்த மாதிரியான சிறிய படங்களால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றதன் மூலம் நானும் ஒரு நட்சத்திரமானேன். நான் பல IIFA விழாக்களில் ஒரு பகுதியாக இருந்ததற்காக மிகவும் பெருமைப்படுகிறேன்; அதற்காக நன்றியுடன் இருக்கிறேன். மேலும், அவர்கள் இந்திய சினிமாவை உலகளவில் மேம்படுத்துவதில் சிறந்த வேலையைச் செய்கிறார்கள். இந்நிகழ்வில், கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நான் ஒரு சினிமா ரசிகன். நான் பார்க்க விரும்பும் படங்களைத் தான் நான் உருவாக்க விரும்புகிறேன். சிலநேரம் அவற்றில் நானே நடிக்கிறேன் அல்லது அவற்றில் நடிக்காமல் தயாரிக்க மட்டும் செய்கிறேன். இப்போது கூட இரண்டு படங்களை நான் தயாரித்து வருகிறேன். அவற்றுக்கு பணம் செலவழிப்பதை தவிர, அவற்றுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று கமல்ஹாசன் பேசினார்.
தொடர்ந்து மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்தைப் பற்றி பேசிய கமல்ஹாசன், "இப்படத்தை நானே தயாரித்தது போல் பெருமைப்படுகிறேன். அப்படம் மணிரத்னத்தை மகிழ்வித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் இருவரும் இணைந்து அடுத்து ஒரு படத்தை தயாரித்து வருகிறோம்" என்றார்.