பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் ‘டெனட்’ என்ற ஹாலிவுட் படத்தை இயக்கியுள்ளார். பிரம்மாண்டத்திற்குப் பெயர்
போன கிறிஸ்டோபர் நோலன், தனித்துவமான கதையால் தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். படப்பிடிப்பு தொடங்குவதில் இருந்து அவரது படத்திற்காக ரசிகர்கள் காத்திருப்பார்கள்.
‘டெனட்’படத்திற்கும் ரசிகர்கள் அப்படித்தான் காத்துக்கிடக்கின்றனர். ஆனால் கொரோனா குறுக்கே வந்து படம் ரிலீசை தள்ளிப்போட்டது. ஜூலை 17 என்று அறிவிக்கப்பட்ட டெனட் ரிலீஸ் கொரோனா காரணமாக ஜூலை 31 என மாற்றப்பட்டது. ஆனால் இன்னமும் கொரோனா பாதிப்பு சரியாகாத நிலையில் ஆகஸ்ட் 12 என மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் ஆகஸ்ட் 12ந்தேதி உலகம் முழுவதும் டெனட் வெளியாகுமா என சந்தேகம் எழுந்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து வரும் நிலையில் பல நாடுகளில் தியேட்டர்களை திறப்பது குறித்து யோசிக்கக்கூட இல்லை. இந்நிலையில் படத்தை ரிலீஸ் செய்ய புதிய திட்டத்தை டெனட் தயாரிப்புக்குழு கையில் எடுத்துள்ளது.
அமெரிக்கா தவிர்த்து ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கொரியா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட 70 நாடுகளில் ஆகஸ்ட் 26ஆம் தேதி ‘டெனெட்’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு ஏற்ப அமெரிக்காவில் செப்டம்பர் 3ம் படம் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டுள்ளது. சீனாவில் படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.