பொன்னியின் செல்வனில் இடம்பெற்ற சோழர் கால ஊர்களும் அவற்றின் தற்போதைய நிலையும்! முழு பின்னணி

பொன்னியின் செல்வனில் இடம்பெற்ற சோழர் கால ஊர்களும் அவற்றின் தற்போதைய நிலையும்! முழு பின்னணி
பொன்னியின் செல்வனில் இடம்பெற்ற சோழர் கால ஊர்களும் அவற்றின் தற்போதைய நிலையும்! முழு பின்னணி
Published on

தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களில் தஞ்சைப் பகுதியை மையமாகக் கொண்டு ஆட்சி புரிந்து வரலாற்றில் அழிக்க முடியாத தடத்தை பதித்து சென்றவர்கள்தான் சோழர்கள். பொது ஆண்டிற்கு பிந்தைய இருநூறு ஆண்டுகள் வரை தஞ்சை, திருச்சி உள்ளடக்கிய பகுதிகளை ஆட்சி செய்த குறுநில அரசாக இருந்த சோழ ஆட்சிப்பரப்பை காஞ்சி வரை விரிவுப்படுத்தி சோழப் பேரரசை நிர்மாணித்த பெருமை முதலாம் கரிகாலச் சோழனையே சேரும். காவிரியில் கல்லணை கட்டி பாசனப் பரப்பை நெற்களஞ்சியமாக்கினாரே அந்த கரிகாலன் இவர்தான்.

அதன்பின் 3ஆம் நூற்றாண்டில் களப்பிரர் வருகைக்கு பின் சோழப் பேரரசு வீழ்ந்து உறையூர், பழையாறை உள்ளிட்ட காவிரிக் கரை நகரங்களை மட்டும் ஆட்சி செய்யும் குறுநில அரசாக மாறிப்போனது. அதன்பின் பல்லவர்களுக்கும், பாண்டியர்கள் ஆதிக்கத்தில் இயங்கிய முத்தரையர்களுக்கும் கட்டுப்பட்ட சிற்றரசாக சோழர்கள் இருந்ததாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. அருகில் இருந்த பிற சிற்றரசுகளுடன் மணவுறவை (திருமண உறவு) ஏற்படுத்தி மீண்டும் பேரரசாக உருவெடுக்க தக்க சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர் சோழர்கள்

.

9 ஆம் நூற்றாண்டின் மத்திமக் காலத்தில் பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையே நடந்த போரை தங்களுக்கு சாதகமாக சோழர்கள் பயன்படுத்தினர். பல்லவர்களுக்கு ஆதரவாக போரில் களமிறங்கிய விஜயலாய சோழன், பாண்டியர்கள் கீழ் இயங்கிய முத்தரையர் வசமிருந்த தஞ்சையைக் கைப்பற்றி சோழப் பேரரசு மீண்டும் அமைவதற்கு வலுவான அடித்தளமிட்டார். அதன்பின் பாண்டியர்களையும் தோற்கடித்து பல்லவர்களை விட பிரமாண்ட பேரரசை நிறுவினார். அடுத்து வந்த முதலாம் ஆதித்த சோழன் பல்லவ அரசன் அபராஜிதனை கொன்று முற்காலச் சோழர்கள் வசமிருந்த அனைத்து பகுதிகளையும் தனது சோழ மகுடத்திற்கு கீழ் கொண்டு வந்தான்.

அதன்பின் வந்த அரசர்கள் பல்லவர்களிடம் இருந்து மீட்ட தொண்டை மண்டலத்தை ராஷ்டிரகூடர்களிடம் பறிகொடுக்க, அதை மீட்கும் முயற்சியில் சுந்தர சோழர் தலைமையிலான சோழ அரசு தீவிரமாக களமாடும். அந்த களம் தான் பொன்னியின் செல்வன் நாவலில் ஆதித்த கரிகாலன் போர்புரியும் பகுதி! இந்தக் கள்ளும், பாட்டும், போர்க்களமும்... எல்லாம் அந்த தொண்டை மண்டலத்தில் நடந்த போர்தான்! இந்த காட்சியில் துவங்கும் பொன்னியின் செல்வன் - 1 திரைப்படம் இறுதியில் வங்கக் கடலில் அருண்மொழிவர்மன் கடலில் காணாமல் போகும் காட்சி வரை பல நகரங்களை கடந்து வந்திருப்பீர்கள். அந்த நகரங்களின் சிறப்புகள் என்ன? அந்த நகரங்கள் தற்போது எங்கு இருக்கின்றன? என்ன பெயரில் இருக்கின்றன? என்பது உங்களுக்கு தெரியுமா? வாருங்கள்., இந்த தொடரில் விரிவாகக் காணலாம்.

1. பழையாறை:

முற்காலச் சோழர்கள் காலத்திலும் சிற்றரசாக சுருங்கிய இடைக்காலச் சோழர்கள் காலத்தில் தலைநகராக விளங்கியது பழையாறை நகரம். கிட்டத்தட்ட 430 ஆண்டுகள் சோழர்களின் தலைநகராக இருந்த பெருமைக்கு உரியது பழையாறை. பின்னர் பிற்காலச் சோழர்கள் காலத்தில் சுந்தரச் சோழர் தலைநகரை தஞ்சைக்கு மாற்றியபோதும் புகழ் குன்றா நகரமாகவே திகழ்ந்திருக்கிறது பழையாறை. திரிஷா நடித்த சுந்தர சோழரின் மகள் குந்தவை கதாபாத்திரம் வாழும் இடமாக படத்தில் காட்டப்பட்டிருப்பதும் இந்த நகரம்தான். தற்போது தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் நகரில் இருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ள நகருக்கு சென்றால் சோழ அரண்மனைகள் மண் மேடுகளாய் சுவடுகளாய் மிஞ்சியிருப்பதைக் காணலாம்.

2. பழுவூர்:

சோழப்பேரரசின் கீழ் இயங்கிய சிற்றரசுகளில் ஒன்றுதான் பழுவூர். சரத்குமார் நடித்த சுந்தர சோழரின் தனாதிகாரியான பெரிய பழுவேட்டரையர், பார்த்திபன் தோன்றிய தஞ்சைக் கோட்டையின் காவலரான சின்னப் பழுவேட்டரையர் இருவரும் இந்த நகரத்துக்காரர்கள்தான். பெரிய பழுவேட்டரையரை மணந்த நந்தினி “பழுவூர் ராணி” என்று அழைக்கப்பட காரணமும் இதுதான். தற்போது கீழப்பழூர், கீழையூர், மேலப்பழூர் என மூன்று சிற்றூர்களாகப் பிரிந்துள்ள இந்த பழுவூர் அரியலூர் மாவட்டத்தில் திருச்சியில் இருந்து 54 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

3. கொடும்பாளூர்

சோழப் பேரரசின் கீழ் இயங்கிய மற்றுமோர் சிற்றரசாக கொடும்பாளூர் பொன்னியின் செல்வனில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். சுந்தர சோழனின் மகன் அருள்மொழிவர்மனை காதலிக்கும் இளவரசி வானதி இந்த ஊரில் பிறந்தவராக காட்சிப்படுத்தப்பட்டிருப்பார். தற்போதும் இந்திய நாட்டின் நினைவுச் சின்னங்களில் ஒன்றான மூவர் கோயில் மற்றும் முகுந்தேஸ்வரர் கோவில் இரண்டும் இடம்பெற்றுள்ள இந்த கொடும்பாளூர் நகரம் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

4. கடம்பூர்:

சோழப்பேரரசின் சிற்றரசர்களாக விளங்கிய சம்புவரையர்கள் ஆட்சி செய்த பகுதிதான் கடம்பூர். பொன்னியின் செல்வனின் மதுராந்தகனுக்கு மகுடம் சூட்ட பழுவேட்டரையர் தலைமையில் ஒரு சதியாலோசனை நடக்குமே அது இந்நகரில்தான். அடுத்த பாகத்தில் வரலாற்றை உலுக்கிய ஒரு மாபெரும் சம்பவம் ஒன்றும் இதே நகரில் அமைந்துள்ள மாளிகையில்தான் நிகழும். தற்போது மாட மாளிகையின்றி, அமைதியான சூழலில் இருக்கும் இந்த கடம்பூர் நகரம் “கீழக்கடம்பூர்” எனும் பெயரில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அருகே அமைந்துள்ளது.

5. தஞ்சை:

சுந்தரச் சோழர் காலத்தில் தான் சோழர்களின் தலைநகரமாக தஞ்சாவூர் மாற்றப்படும். கோட்டைகளாலும், மாட மாளிகைகளாலும் சூழப்பட்டு, சின்னப்பழுவேட்டரையரின் தலைமையில் காவல் காக்கப்பட்டு உச்சகட்ட பாதுகாப்புடன் திகழும் இந்த நகரின் அரண்மனைக்குள்தான் வந்தியத்தேவன் இலகுவாக சென்று வருவார். அப்போது வெகுவாக வர்ணிக்கப்பட்டு இருக்கும் இந்த நகரின் அரண்மனை தற்போது எங்கே என்ற கேள்விக்கு முரண்பட்ட தகவல்களே பதில்களாக கிடைக்கின்றன.

6. வீர நாராயணம் ஏரி:

ஆதித்த கரிகாலனிடம் ஓலைகளைப் பெற்றுக் கொண்டு தஞ்சை நோக்கி வரும் வல்லவரையன் வந்தியத்தேவன் “பொன்னி நதி பாக்கணுமே!” எனப் பாடி காவிரியின் அழகைக் கண்டு சொக்கி நிற்பாரே அந்த இடம்தான் வீர நாராயணம் ஏரி. ராஜாதித்ய சோழனால் கட்டப்பட்ட இந்த ஏரி அவரது தந்தை முதலாம் பராந்தக சோழனின் இயற்பெயரான வீரநாராயணன் எனும் பெயர் கொண்டு அழைக்கப்பட்டு வந்தது. பின்னாளில் வீராணம் ஏரி என மருவி அழைக்கப்பட்டு வரும் இந்த ஏரி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அருகே அமைந்துள்ளது.

7. குடந்தை:

கடம்பூர் மாளிகையில் பழுவேட்டரையரின் சதி ஆலோசனையை ஒட்டுக் கேட்டுவிட்டு, தஞ்சை நோக்கி வரும் வழியில் வந்தியத்தேவன் சுந்தர சோழரின் மகளும் சோழ இளவரசியுமான குந்தவையை முதன்முதலாக குடந்தை நகரில் வாழும் ஜோசியர் இல்லத்தின் வாசலில் வைத்து சந்திப்பார். வந்தியத்தேவன் வழக்கம்போல பேசிக் கொண்டிருக்க, குந்தவை ஒரு வார்த்தை கூட பேசாமல் நமட்டுச் சிரிப்பை உதிர்த்து நகரும் அந்த காட்சி திரைப்படத்தில் ஏனோ இடம்பெறவில்லை. அந்த காட்சி நடக்கும் இடமாக குடந்தை, தற்போது கும்பகோணம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

8. நாகத் தீவு:

அருள்மொழிவர்மனை பார்க்க வரும் வந்தியத்தேவன் அடையும் இடம்தான் நாகத்தீவு. நாகர்கள் என்று குறிப்பிடப்படும் மக்கள் அதிகம் வாழ்ந்ததால் இப்பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. தற்போது நயினாத்தீவு என்று அழைக்கப்படும் இந்த தீவு யாழ்ப்பாணத் தீபகற்ப பகுதியில் அமைந்துள்ளது.

9. திருமழபாடி:

சுந்தர சோழரின் அண்ணன் கண்டராதித்தரின் மனைவியான செம்பியன் மாதேவியின் சொந்த ஊர்தான் திருமழபாடி. சோழ அரசனைக் காக்க உயிரையும் தருவோம் என சபதம் செய்த வேளக்காரப் படைக்கு சொந்தமான இந்த ஊர் தற்போது அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

10. திருக்கோயிலூர்:

சோழ நாட்டின் சிற்றரசுகள் அனைத்தும் மதுராந்தகனை அரசனாக்க சபதம் எடுக்க, ஆதித்த கரிகாலனுக்கு பக்க பலமாக உடனிருப்பாரே மலையமான்! அவர்தான் திருக்கோயிலூர் எனும் சிற்றரசின் தலைவர். அவர் ஆதித்த கரிகாலனுடன் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணமும் இருக்கிறது. ஆதித்த கரிகாலன் மலையமானின் மகள்வழிப் பேரன் என்பதால் அத்தனை வயதிலும் கையில் வாளேந்தி களம் கண்டிருப்பார் அவர். அவரது சிற்றரசான அந்த திருக்கோயிலூர் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com