மெகாஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்தநாள் இன்று. தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்தவர் சிரஞ்சீவி. 70களின் இறுதியில் துவங்கி, அரசியல் காரணங்களுக்காக சினிமாவிலிருந்து 2007ல் ப்ரேக் எடுத்துக் கொள்ளும் வரை பல ஹிட் படங்கள் கொடுத்தவர். அதெல்லாம் பல முறை பார்த்த வரலாறுதான். ஆனால் கம்பேக் கொடுத்த பிறகு அவர் ரசிகர்களுக்கு கொடுத்து வரும் அதிர்ச்சி பற்றியும், பழைய சிரஞ்சீவியா திரும்ப வர வேண்டிய அவசியம் பற்றியும் தான் இதில் பார்க்கப் போகிறோம்.
2007ல் Shankar Dada Zindabad (இந்தியில் `முன்னா பாய் எம்பிபிஎஸ்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவான `லகே ரஹோ முன்னா பாய்’ படத்தின் தெலுங்கு ரீமேக்) என்ற பெரிய ஹிட் கொடுத்துவிட்டுதான் அரசியலுக்குள் நுழைந்தார் சிரஞ்சீவி. அரசியல் நினைத்த அளவு எளிதாக அமையாததால், அவ்வப்போது படங்களில் கெஸ்ட் ரோலில் வந்து `நானும் இங்க தான் இருக்கேன்’ என தன்னை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார். ஒருகட்டத்தில் முழுதாக அரசியலை உதறிவிட்டு மீண்டும் சினிமாவுக்கு அவர் வரவே, அந்த சிரூவை பார்த்து மெகா ஸ்டார் coming-ரா என ஜாலியானார்கள் ரசிகர்கள்.
ஒரு சேஃபான கம்பேக்காக இருக்குமே என விஜய் நடித்து அதிரடி ஹிட்டான `கத்தி’ படத்தை `கைதி 150’யாக ரீமேக்கினார். பக்கா மாஸ் கதை, சிரஞ்சீவியின் பழைய படமான `கைதி’ பெயரை டைட்டிலில் இணைத்தது என எல்லாம் சிறப்பாக அமைய 2017ன் பெரிய ஹிட் படமாக மாறியது. “பத்து வருஷ கேப்ல சினிமா மாறியிருக்கும்னு நினைச்சோம், ஆனா ஹிட்டு குடுக்கறது ரொம்ப ஈஸியா இருக்கறதே” என நினைத்தாரோ என்னவோ அடுத்தடுத்து அவர் கொடுத்த படங்கள் எல்லாம் வொத்தூ... வொத்தூ ரகமாக இருந்தது.
`சைரா நரசிம்ஹ ரெட்டி’ என சுதந்திரப் போராட்ட வீரர் உய்யாலவாட நரசிம்ஹ ரெட்டியின் வாழ்க்கையைத் தழுவி படத்தை உருவாக்கினார்கள். இந்தக் கதையை எடுத்து படமாக்கலாம் என சொன்னதே சிரஞ்சீவிதான் என்பதால் எவராலும் மறுக்க முடியவில்லை. ஆனால் தெலுங்கு சினிமா மசாலா, தேசபக்தி என வித்தியாசமான காம்போவை கொஞ்சம் காலை வாரியது. தெலுங்கில் படம் கையைக் கடிக்காத அளவு வெற்றியாக அமைந்தாலும், பெருவாரியான ரசிகர்களுக்கு திருப்தி அளிக்காத ஒன்றாகத்தான் இருந்தது.
அடுத்து எடுத்த படம் தான் (ஆச்சார்யா) ரசிகர்களுக்குப் பேரிடி. கொரட்டல சிவா ஒரு பக்கம் மிர்ச்சி, ஸ்ரீமந்துடு, ஜனதா கேரேஜ், பர்த் அனே நேனு என பிளாக்பஸ்டர் கொடுத்துக் கொண்டிருந்தார். அவரை அழைத்து தனக்கு ஒரு படம் இயக்க சொன்னார் சிரஞ்சீவி. படம் துவங்கியதில் இருந்தே பல குளறுபடிகள். ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமான காஜல், ஒரு பாடலுக்கு மட்டும் என சுறுக்கப்பட்டார். கேமியோ ரோல் என அழைத்து வரப்பட்ட ராம் சரண் காட்சிகள் 40 நிமிடங்களாக நீளமானது. ஒருவழியாக படம் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் ”ஏமிரா இதி” என தலையில் கை வைக்க, படம் ஃப்ளாப்.
சரி மறுபடி ஏன் ரீமேக்கே நடிக்கக் கூடாது என மலையாளத்தில் ஹிட்டான `லூசிஃபர்’ படத்தை, இந்த தலை அந்த உடலுடன் இணையப் போகிறது என `காட்ஃபாதர்’ உருவானது. விமர்சன ரீதியாக பாசிடிவ் ரிவியூ வந்தாலும் ரசிகர்களுக்கு திருப்தி இல்லை. வணிக ரீதியாக படம் தோல்வியடைந்தது.
இது சரிப்பட்டு வராது என இளம் இயக்குநர் பாபியை அழைத்து காரசாரமான ஒரு ஆந்திரா மீல்ஸை ரெடி பண்ணுங்க என சிரஞ்சீவி சொல்ல, சிரூ - ரவிதேஜாவை இணைத்து `வால்டர் வீரய்யா’ படம் சரசரவென உருவானது. மாஸ் ரசிகர்களுக்கு படம் பிடித்துப் போனது, அதே சமயம் 2023ன் அதிக லாபகரமான தெலுங்குப் படமாகவும் மாறியது. இந்த ஷங்கராந்தி நமக்கு சூப்பர் கலெக்ஷன்மா என ரசிகர்கள் காலரை தூக்கி விட, பின்னாலேயே அவர்கள் காலை வாரும் சம்பவம் தயாராகிக் கொண்டிருந்தது.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து ஹிட்டான வேதாளம் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய துணிவுடன் களம் இறங்கி விடாமுயற்சியுடன் படத்தை கொடுத்தார்கள்.
அவுட் டேட்டடான கதைக் களம், அரதப் பழைய ட்விஸ்ட், க்ரிஞ்சு குடோனாக காட்சிகள் என படத்திற்கு மரண அடி.
சிரஞ்சீவி இன்னும் ஒரு படத்தை ப்ராஜெக்ட் போல் அசெம்பிள் செய்வதை நிறுத்திவிட்டு, உண்மையிலேயே ரசிகர்களுக்கு பொழுதுபோக்கை கொடுக்கும் கதைகளை தேர்வு செய்ய வேண்டும்.
சினிமா மாறியிருக்கிறது, படத்தில் வரும் வசனங்களோ வார்த்தைகளோ கூட கவனிக்கப்படுகிறது, அதை தெரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக `பிம்பிசாரா’ என்ற ஹிட் படத்தைக் கொடுத்த வசிஷ்டா இயக்கத்தில் நடிக்கிறார் சிரஞ்சீவி. கூடவே அது ஃபேண்டஸி படம் எனவும் கூறியிருக்கிறார்கள். 157வது படமாக சிரஞ்சீவிக்கு அது எண்ணிக்கையில் மட்டுமல்லாமல், கம்பேக்காகவும் உயரத்தைக் கூட்ட அவரது பிறந்தநாளில் வாழ்த்துகளை கூறிக் கொள்வோம்.