ஓடிடியில் வெளியாகி பின்பு நீக்கப்பட்ட சிம்புதேவனின் 'கசட தபற'

ஓடிடியில் வெளியாகி பின்பு நீக்கப்பட்ட சிம்புதேவனின் 'கசட தபற'
ஓடிடியில் வெளியாகி பின்பு நீக்கப்பட்ட சிம்புதேவனின் 'கசட தபற'
Published on

சிம்புதேவன் இயக்கத்தில் பல திரைநட்சத்திரங்கள் நடித்துள்ள 'கசட தபற' திரைப்படம் சோனிலிவ் (Sonyliv) ஓடிடியில் நேற்று மாலை வெளியாகி பின்பு இன்று நீக்கப்பட்டது.

நகைச்சுவை நடிகர் வடிவேலுவை கதாநாயகனாக வைத்து "இம்சை அரசன் 23ஆம் புலிகேசி" திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநகராக அறிமுகமானவர் சிம்புதேவன். அதன் பின்பு "அறை எண் 305 இல் கடவுள்", "இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்", "ஒரு கண்ணியும் மூன்று களவானிகளும்" போன்ற திரைப்படங்களை இயக்கினார். அதன் பின்பு நடிகர் விஜயை வைத்து "புலி" திரைப்படத்தை இயக்கினார்.

இப்போது இயக்குநர் வெங்கட் பிரபுவும், டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிச்சந்திரனும் இணைந்து தயாரித்துள்ள ’கசட தபற’ படத்தை இயக்கியிருக்கிறார். இதில் ஆறு கதைகள் தனித்தனியாக சொல்லப்பட்டாலும், இறுதியில் ஒரு புள்ளியில் ஒன்றாக இணைவது போல திரைக்கதையை வடிவமைத்து இருக்கிறார் சிம்புதேவன். இந்த ஆறு கதைகளில் சந்தீப் கிஷன், ஹரீஷ் கல்யாண், ரெஜினா, பிரியா பவானி ஷங்கர், விஜயலட்சுமி, வெங்க பிரபு, பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம் சி எஸ், ஷான் ரோல்டன், பிரேம்ஜி அமரன் ஆகியோர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்கள்.

இந்தத் திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகி  சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தநிலையில் இப்போது நீக்கப்பட்டுள்ளது. "வெங்கட்பிரபு நிறுவனம் தங்களுக்கு 88 லட்ச ரூபாய் வழங்க வேண்டும். ஆனால் இதுவரை அந்த தொகையை தயாரிப்பு நிறுவனம் வழங்கவில்லை" என வெளியூர் படப்பிடிப்புகளுக்கு யூனிட் வழங்கும் ஏ.சி.எஸ் (ACS) என்ற நிறுவனம் நீதிமன்றத்தில் படத்திற்கு தடை வாங்கியுள்ளது. இதன் காரணமாக சோனி ஓ.டி.டி தளத்திலிருந்து கசட தபற திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது.  இருந்தபோதிலும் கசட தபற படத்தின் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இந்த பிரச்சனை தீர்க்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் இப்படம் ரிலீசாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com