தனது வீட்டில் வேலை பார்த்த ஆந்திராவை சேர்ந்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக கொடுக்கப்பட்ட புகாரில் நடிகை பானுபிரியா மீது சென்னை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தனது வீட்டில் பணிபுரிந்த சிறுமி 10 பவுன் நகை, ஒரு லட்ச ரூபாய் பணத்தை திருடியதாக நடிகை பானுபிரியா கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில், வீட்டில் வேலை செய்த சிறுமி மற்றும் அவரது தாயை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் இந்த விவகாரத்தில் திருப்பம் ஏற்பட்டது. தனது 14 வயது மகளை வீட்டு வேலைக்கு அமர்த்தி, பானுபிரியா மற்றும் அவரது கணவர் சித்ரவதை செய்ததாக சிறுமியின் தாய் ஆந்திர போலீஸாரிடம் புகார் அளித்தார். புகார் அளித்த சிறுமியின் தாய் ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய ஆந்திர போலீஸார், பானுப்பிரியா மற்றும் அவரது கணவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் பானுபிரியா சென்னையில் வசிப்பதால், அந்த வழக்கின் கோப்பினை தற்போது சென்னை போலீஸாருக்கு அனுப்பியுள்ளனர். அதன் அடிப்படையில், சென்னை பாண்டிபஜார் போலீஸார் பானுபிரியா மற்றும் அவரது கணவர் கோபாலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி, 323 - காயம் ஏற்படுத்துதல், 506 - மிரட்டுதல், அவமதித்தல், தொந்தரவு தருதல் மற்றும் 341 - சிறைவைத்தல் உள்ளிட்ட குற்றங்கள் செய்ததாக சிறார் நீதி குழந்தையின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.