95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அடுத்தாண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில் ஆஸ்கர் விருதுகளுக்காக வெளிநாட்டுப் பிரிவின் கீழ் இந்தியாவில் இருந்து குஜராத்தி மொழித் திரைப்படமான செல்லோ ஷோ தேர்வாகியுள்ளது. டிஎஸ் நாகபரணா தலைமையிலான 19பேர் கொண்ட குழுவின் கீழ் இந்தியத் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தமிழில் இருந்து இரவின் நிழல், இந்தியில் இருந்து பதாய் தோ, ராக்கெட்ரி நம்பி, பிரம்மாஸ்திரம், தி காஷ்மீர் ஃபைல்ஸ், தெலுங்கில் இருந்து ஆர்.ஆர்.ஆர் எனப் பல படங்களுக்கு இடையில் போட்டி நிலவி வந்த நிலையில் யாரும் சற்றும் தெரிப்பார்க்காவிதமாக , குஜராத்தி மொழியில் வெளியான 'செல்லோ ஷோ' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்துத் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
1988 வெளியான 'சினிமா பாரடைசோ' படத்தின் காப்பி தான் 'செல்லோ ஷோ’ என நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். 1988ல் வெளியான சினிமா பாரடைசோ படத்துக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த படம் ஆஸ்கர் உட்பட் கோல்டன் குளோப், பாஃப்தா உட்படப் பல விருதுகளை வென்றுள்ளது. உலகம் முழுவதும் பிரபலமான ஒரு படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் என்று தெரியாமலே அதை ஆஸ்கருக்கு அனுப்பியுள்ளது என மத்திய அரசின் தேர்வுக் குழு மீது விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், 'செல்லோ ஷோ படத்தின் இயக்குநர் பான் நலின், தனது திரைப்படத்தின் மீது எழுந்துள்ள விமர்சனம் குறித்து பதிலளித்துள்ளார். ’’ இரண்டு படத்திலும் சிறுவர்கள் ஃபிலிம் ரீலைப் பார்த்து ரசிக்கும் போஸ்டரை வைத்து மட்டும் செலோ ஷோ காப்பி என்று சமூக ஊடகத்தில் விமர்சித்து வருகிறார்கள்.
உலகெங்கிலும் உள்ள பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுப் பாராட்டப்பட்ட செல்லோ ஷோ வரும் அக்டோபர் 14-ஆம் தேதி இந்தியாவில் திரைப்பட உள்ளது. படம் வெளியானதும் , நகலா? அசலா? என்று மக்கள் முடிவு செய்யவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.