கவனம் ஈர்த்த அஸ்ஸாம் திரைப்படம் 'BRIDGE' - 18வது சென்னை படவிழா!

கவனம் ஈர்த்த அஸ்ஸாம் திரைப்படம் 'BRIDGE' - 18வது சென்னை படவிழா!
கவனம் ஈர்த்த அஸ்ஸாம் திரைப்படம் 'BRIDGE' - 18வது சென்னை படவிழா!
Published on

சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் மூன்றாம் நாள் நிகழ்வில் சில இந்தியத் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அதில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த BRIDGE என்ற சினிமா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அஸ்ஸாமில் ஆண்டுக்கு ஒரு முறையேனும் பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. பிரம்மபுத்திரா நதியானது கடக்கும் நீர் வழியின் மத்தியில் ஒரு பசுமையான கிராமத்தில்தான் இக்கதை நடக்கிறது.

தனது சிறிய கிராமத்தில் பதின்பருவப் பெண் ஒருவள் தனது தம்பி மற்றும் தாயுடன் வசித்து வருகிறாள். அவள் அக்கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறாள். தந்தை இல்லாத அக்குடும்பத்தின் மொத்த பலமாக அப்பெண் இருக்கிறாள். ஒரு முறை அப்பெண் தனது நிலத்தில் விவசாயம் செய்யும்படியாக இருக்கும் புகைப்படத்தை அவ்வூர் சிறுவன் ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவேற்றவே அது செய்தியாக தொலைக்காட்சியில் வருகிறது.

கவுஹாத்தியில் இருந்து வரும் செய்தியாளருக்கும் அப்பெண்ணுக்கும் இடையே அன்பு உருவாகி காதலாக மலர்கிறது. ஆனால் அதற்கு சாதியோ மதமோ பொருளாதாரமோ தடையாக இல்லை. உண்மையில் இயக்குநர் க்ரிபால் கலிட்டா இங்குதான் கதையை சொல்லத் துவங்குகிறார். விசயம் யாதெனில் அக்கிராமத்தில் இருந்து மக்கள் வெளியேறவும் உள்நுழையவும் முடியாதபடி இடையே பிரம்மபுத்திரா நதி ஓடுகிறது. அது அந்நதியின் சிறிய கிளையாகவும் இருக்கலாம். அவர்கள் சில வெட்டிய வாழை மரங்களை பயன்படுத்தியே கிளைநதியை கடக்க முடிகிறது.

இந்த சிறு நீர்ப்பாதையைக் கடக்க அங்கு ஒரு பாலம் கூட இல்லை என்பது அவ்வூரின் பெரிய பிரச்னையாக இருக்கிறது. ஒரு முறை அந்நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில்தான் அப்பெண்ணின் தந்தை அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார். தந்தையின் மரணம், அக்காவின் திருமணத்திற்கு தடை என அந்நதி ஒரு இடைஞ்சலாக இருப்பதாக உணரும் சிறுவன் அந்நதியின் மேல் கல் எறிந்து தனது கோபத்தைக் கொட்டுகிறான். ஆனால் அப்போது அந்தப் பெண் “இந்த நதியை வெறுக்காதே, இது தான் நம் உயிர் மூச்சு. இந்த நதி இல்லாமல் நாம் விவசாயம் செய்ய முடியுமா...?” என தம்பியை சமாதானம் செய்கிறாள்.

இந்த காட்சியில் ஆடியன்ஸின் அப்லாஸை மொத்தமாக அள்ளிச் செல்கிறார் இயக்குநர் க்ரிபால் கலிட்டா. இப்படத்திற்கு சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ராமன் ரப்பா. சவிதா தேவி மற்றும் ராம குமார் ஆகியோர் இப்படத்தை இணைந்து தயாரித்திருக்கின்றனர். ஷிவரானி கலிட்டா, பார்த்தா ப்ரதிம் போரா, அனிந்திதா தாஸ் ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

51வது கோவா சர்வதேச திரைப்படவிழாவில் Indian Panorama பிரிவில் திரையிடப்பட்ட ஒரே அஸ்ஸாம் மொழி திரைப்படம் இது. அது மட்டுமல்ல இப்படத்திற்கு கோவா பட விழாவில் சிறப்பு விருதும் வழங்கப்பட்டது. இது தவிர மும்பை பட விழாவிலும் இப்படம் விருது பெற்றது. மேலும் South-East Film Festival USA, லண்டன் திரைப்படவிழா என பல்வேறு திரைப்பட விழாக்களில் இப்படம் திரையிடப்பட்டது. தற்போது நடைபெற்றுவரும் 18வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் BRIDGE திரையிடப்பட்டு நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com