சதுரங்க வேட்டை 2 கதையை திருடி, தெலுங்கில் கிலாடி படம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதை ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கான விற்பனை நடைமுறைகளுக்கு தடை கோரிய வழக்கில் கிரண் ஸ்டூடியோ நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரைப்பட தயாரிப்பாளர் கங்காதரன் தாக்கல் செய்துள்ள மனுவில், சதுரங்க வேட்டை 2 திரைப்படத்தை தமிழில் வெளியிட காப்புரிமை பெற்றுள்ளதாகவும், அதை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடும் உரிமையை ஹைதராபாத்தில் உள்ள கிரண் ஸ்டூடியோ நிறுவனத்தைச் சேர்ந்த ரமேஷ் வர்மாவுடன் 40 லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ரவி தேஜா நடிப்பில் கிலாடி என்ற படத்தை, ஒப்பந்தத்துக்கு விரோதமாக சதுரங்க வேட்டை 2 கதையை மையமாக வைத்து தெலுங்கில் வெளியிடப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதனால், கதை திடுட்டில் ஈடுபட்ட கிரண் ஸ்டூடியோ நிறுவனம் கிலாடி திரைப்படத்தை ஓடிடி மற்றும் பிற தளங்களில் வெளியிட விற்பனை செய்வதற்கும், தொடர்ந்து படத்தை வெளியிடுவதற்கும் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து ஒரு வாரத்தில் கிரண் ஸ்டுடியோ நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தார்.