நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக சினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த வழக்கில் ஜூன் 6ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கஸ்தூரி ராஜாவின் கடனை அடைக்க ரஜினி நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னையைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் போத்ரா சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “2012ஆம் ஆண்டு இயக்குநர் கஸ்தூரி ராஜா என்னிடம் கடன் வாங்கினார். நான் பணத்தைத் திருப்பித் தரவில்லை என்றாலும், என்னுடைய சம்பந்தி ரஜினிகாந்த் கடனை அடைத்துவிடுவார் என்று எழுதிக்கொடுத்திருந்தார். பின், கடன் தொகையை திருப்பிக்கொடுக்க காசோலை ஒன்றை கஸ்தூரி ராஜா கொடுத்தார். அது வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது. ரஜினி வீட்டுக்கு விவரத்தைச் சொன்னேன். ஆனால், பலர் ரஜினியின் பெயரைத் தவறாகப் பயன்படுத்துவது போல கஸ்தூரி ராஜாவும் செய்திருக்கிறார் என்று பதில் வந்தது. இதனால், தன் பெயரைத் தவறாகப் பயன்படுத்திய சம்பந்தி கஸ்தூரி ராஜா மீது நடவடிக்கை எடுக்க ரஜினிக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
விசாரணையின் போது போத்ரா ஆஜராகவில்லை என்பதால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் போத்ரா மீண்டும் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்ற, ரஜினிக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கை கீழ்நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படி இன்று விசாரணையை மேற்கொண்ட சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் வரும் ஜூன் 6ஆம் தேதி ரஜினியை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.