பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு மத்திய அரசு "ஒய் பிளஸ்" பாதுகாப்பு கொடுத்துள்ளது.
மும்பை மாநகரம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்போல இருப்பதாக அண்மையில் நடிகை கங்கனா ரனாவத் ட்விட்டரில் கருத்து வெளியிட்டிருந்தார். அவரது இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்த சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், அச்சமாக இருந்தால் மும்பை மாநகரத்திற்கு வரவேண்டாம் என்றும், மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு, சஞ்சய் ராவத்துக்கு பதில் அளித்திருக்கும் கங்கனா ரனாவத், சிவசேனா தொண்டர்கள் என்ன மிரட்டல் விடுத்தாலும், வரும் 9 ஆம் தேதி மும்பைக்கு நிச்சயம் வரப் போவதாகவும் முடிந்தால் தடுத்து பாருங்கள் என்றும் சவால் விடுத்தார். இதனையடுத்து கங்கனா ரனாவத்துக்கு முழுமையான பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று ஹிமாச்சல் மாநில முதல்வர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கங்கனா ரனாவத்துக்கு "ஒய் பிளஸ்" பாதுகாப்பு மத்திய அரசு வழங்கியுள்ளது. மும்பை வரும் கங்கனாவுக்கு துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்பு கொடுப்பார்கள். கங்கனாவின் இல்லத்துக்கும், கங்கனா வெளியே செல்லும் போதும் "ஒய் பிளஸ்" வீரர்கள் பாதுகாப்பு அளிப்பார்கள். சுழற்சி முறையில் 7 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.