‘பிகில்’ படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து சென்சார் போர்டு தெரிவித்துள்ளது
‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பிகில்’. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் விஜய்யுடன், நயன்தாரா, விவேக், இந்துஜா, ஷாக்கி ஷெராஃப், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஆக்ஷன் பார்முலாவில் எடுக்கப்பட்டுள்ள ‘பிகில்’ படத்தின் பாடல் வெளியிட்டு விழாவில் பேசிய விஜய், அரசியல் தொடர்பாக சில கருத்துக்களை கூறினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியது. இந்த தொடர் பரபரப்பு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் படத்திற்கு இன்று தணிக்கைக் குழுவினர் சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக உள்ளதால் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். பிகில் படம் தணிக்கை செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார்.
இந்நிலையில் படத்தில் வரும் வசனங்களில் சில வார்த்தைகளை சென்சார் போர்டு மியூட் செய்துள்ளது. படத்தின் தொடக்கத்திலேயே ''சென்சார் போர்டுக்கு நன்றி'' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. அதனை சென்சார் போர்டு நீக்கியுள்ளது. படத்தில் கத்தியால் குத்தப்பட்டு ரத்தம் தெறிக்கும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளதாகவும் அந்தக்காட்சி நீக்கம் செய்யப்பட்டதாகவும் சென்சார் போர்டு குறிப்பிட்டுள்ளது. ஒழுக்கம் கருதி இரண்டு கெட்ட வார்த்தைகளையும், சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதால் வசனத்தில் வரும் 'கோர்ட்', ‘டெல்லி’ என்ற வார்த்தைகளையும் மியூட் செய்துள்ளதாக சென்சார் போர்டு தெரிவித்துள்ளது.