பத்மாவதி படத்தின் பெயரை மாற்றுமாறு சென்சார் போர்டு பரிந்துரை செய்துள்ளதால் பெயர் மாற்றப்படும் என்று தெரிகிறது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள படம் பத்மாவதி. டிசம்பர் ஒன்றாம் தேதி இந்தப் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. படத்தில் ராஜபுத்திரர்கள் பற்றியும், பத்மாவதி பற்றியும் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி எதிர்ப்பு எழுந்தது. ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் படத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. பாஜக தலைவர்கள், முதலமைச்சர்கள் பலரும் படத்திற்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தனர். கடும் எதிர்ப்பால் படம் திரையிடுவது தள்ளிப்போனது.
இந்நிலையில், பத்மாவதி படம் தொடர்பான சிக்கல்கள் முடிவுக்கு வரும் தருவாயை எட்டியுள்ளது. பத்மாவதி படம் கடந்த டிசம்பர் 28-ம் தேதி திரைப்பட தணிக்கை வாரியக் குழுவிற்கு சென்றது. படத்தில் எழுந்த வரலாற்று சிக்கல்கள் காரணமாக தணிக்கைக் குழுவால் அமைக்கப்பட்ட சிறப்பு பார்வைக் குழு இந்தப் படத்தை பார்வையிட்டது. இந்த குழுவில் ஜெய்ப்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் கே.கே.சிங் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
படத்தை பார்வையிட்ட சிறப்பு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்க முடிவு செய்துள்ளது. மேலும் பத்மாவதி என்ற பெயரை பத்மாவத்(Padmavat) என்று மாற்றுமாறு பரிந்துரை செய்துள்ளது. படத்தில் சில மாற்றங்களை செய்யவும், 26 கட் செய்யவும் சென்சார் போர்டு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு மீண்டும் படம் சென்சார் போர்டுக்கு காண்பிக்கப்பட்ட பின்னர் யு/ஏ சான்றிதழ் வழங்கப்படும்.