'மவுனம் சாதிக்கும் முக்கிய பிரபலங்கள்...' - திரைத்துறை வரைவு மசோதாவை எதிர்ப்பது யார் யார்?

'மவுனம் சாதிக்கும் முக்கிய பிரபலங்கள்...' - திரைத்துறை வரைவு மசோதாவை எதிர்ப்பது யார் யார்?
'மவுனம் சாதிக்கும் முக்கிய பிரபலங்கள்...' - திரைத்துறை வரைவு மசோதாவை எதிர்ப்பது யார் யார்?
Published on

வரைவு ஒளிப்பதிவு திருத்த மசோதாவை கடந்த 18-ம் தேதி மத்திய அரசு வெளியிட்டதில் இருந்தே இந்தியா முழுவதும் உள்ள பல திரைக் கலைஞர்கள் தங்களுடைய எதிர்ப்புகளை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். பல முக்கிய பிரபலங்கள் மவுனம் காத்து வர, யார் யாரெல்லாம் இந்த வரைவு மசோதாவுக்கு மசோதாவுக்கு எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர் என்பதை கவனிப்போம்.

கடந்த 2019-ஆம் ஆண்டு மாநிலங்களவையில் வரைவு ஒளிப்பதிவு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் அது நிலைக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. நிலைக்குழு கடந்தாண்டு மார்ச் மாதம் அறிக்கையை சமா்ப்பித்தது. தற்போது மீண்டும் 2021-இல் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.



இந்தத் திருத்தச் சட்டத்தின் ஒருமுறை தணிக்கைக்கு உள்ளான திரைப்படங்கள் மீண்டும் தணிக்கை செய்ய கோர முடியும். மேலும், திரைப்பட திருட்டுகளுக்கு கடுமையான சிறை தண்டனை, அபராதம் ஆகியவை விதிக்கப்படவுள்ளன. ஆனால், மொத்த சினிமா உலகின் குரல்வளையையும் ஒடுக்கும் வகையில் இந்த மசோதாவில் பல அம்சங்கள் அமைந்துள்ளதாக திரைத்துறையினர் இதுகுறித்து அச்சம் கொள்கின்றனர். தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலர் இந்த மசோதாவை எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்திய சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசன், ''கண், வாய், காதுகளை அடைத்துக் கொண்டு இருக்கும் இந்தியாவின் மூன்று குரங்கு சின்னங்களாக ஒரு போதும் சினிமா, ஊடகம் மற்றும் கல்வி இருக்காது. அதன் சுதந்திரத்தை நசுக்கப் பார்த்தால் அது மிகப்பெரிய பாதிப்பையே உண்டாக்கும். இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்'' என்று தனது கருத்தை ஆவேசமாக பதிவிட்டிருந்தார்.

இதேபோல் நடிகர் சூர்யா, "சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காகத்தான். அதன் குரல்வளையை நெரிப்பதற்காக அல்ல" என்று அழுத்தமாக தனது எதிர்ப்பை பதிவு செய்தார். தொடர்ந்து நீட் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வரும் சூர்யா இந்த கருத்தை தெரிவித்ததும் தமிழக பாஜக அவர் மீது வழக்குப் போடுவதாக எச்சரித்தது சர்ச்சையானது.

சூர்யாவை போல அவரின் தம்பி நடிகர் கார்த்தி, "எப்போது வேண்டுமானாலும் ஒரு திரைப்படத்தின் சென்சார் சான்றிதழை ரத்து செய்யும் அதிகாரம் இந்த சட்ட திருத்தத்தின் ஊடாக மத்திய அரசின் கைகளுக்கு செல்வது வியாபார ரீதியாக ஒவ்வொரு படத்தையும் பாதிக்கக்கூடும். அதனால், இந்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள திருத்தத்தை கைவிட வேண்டும். அதேநேரத்தில் பைரசியை தடுக்க இந்த சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களை வரவேற்கத்தக்கவை. இருந்தாலும் ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்கும் விதமாக உள்ளது" எனக் குறிப்பிட்டு இருந்தார்.

எதிர்ப்போடு நிற்காமல், இந்த விஷயத்தை தமிழக முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு திரையுலகினரை அழைத்துக் கொண்டு சென்று எடுத்துரைத்தார் கார்த்தி. அவரின் முயற்சியால் தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலினின் இந்த சட்டத் திருத்தத்தை கைவிடக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நடிகர் விஷால், ''பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் எங்கே? தணிக்கை வாரியம் ஏன் உள்ளது? பரபரப்பான செயல்முறை ஏன்? சினிமா துறையை எப்போதும் குறிவைப்பது ஏன்? முதலில் ஜிஎஸ்டி, பின்னர் பைரசிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை. இப்போது ஒளிப்பதிவு திருத்த மசோதா. இந்தச் சட்டத்தைக் கொண்டுவருவது நியாயமில்லை'' என்று தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

இவர்களை தவிர நடிகை ரோகினி, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், நடிகர் சரத்குமார், இயக்குநர் பா.ரஞ்சித், கவுதம் வாசுதேவ் மேனன், நடிகர் பிரகாஷ் ராஜ், ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு என்று பலர் எதிர்ப்புகளை பதிவு செய்திருந்தனர்.

இதேபோல் இயக்குநர் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப், நந்திதா தாஸ், பர்ஹான் அக்தர் உள்ளிட்ட 140 கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதினர். அதில், ஏற்கெனவே கலைஞர்கள் பல்வேறு அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் சூழலில், இந்தப் புதிய சட்ட திருத்த வரைவு அதனை இன்னும் வலுவாக்கும் எனக் குறிப்பிட்டிருந்தனர். மேலும், தணிக்கை சான்றிதழ் தொடர்பாக முடிவெடுக்கும் உச்ச அதிகாரம் மத்திய அரசுக்கு இருப்பது, கருத்து சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்கும் செயல் எனவும் அவர்கள் கண்டித்திருந்தனர்.

வரைவு ஒளிப்பதிவு திருத்த மசோதாவை கடந்த 18-ம் தேதி மத்திய அரசு வெளியிட்டதில் இருந்தே இந்தியா முழுக்க உள்ள பல திரைக் கலைஞர்கள் தங்களுடைய எதிர்ப்புகளை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். என்றாலும் தென்னிந்திய மொழிகளில் இருந்தே அதிகமான எதிர்ப்புகள் பதிவாகி இருக்கிறது. இந்தி சினிமா தரப்பில் இருந்து அனுராக் காஷ்யப், நந்திதா தாஸ், பர்ஹான் அக்தர், ஹன்சல் மேத்தா, ஷபனா அஸ்மி, சோயா அக்தர், திபக்கர் பானர்ஜி, இயக்குநர் ஆனந்த் காந்தி, இயக்குநர் தேவாஷிஷ் மகிஜா, நடிகை ரோஹினி ஹட்டங்கடி, இயக்குநர்கள் விஷால் பரத்வாஜ், சுனில் மிஸ்ரா, பழம்பெரும் இயக்குநர் ஷியாம் பெனகல் போன்ற குறிப்பிட்ட சிலரே எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் கமல், சூர்யா போன்று இந்தி சினிமாவின் பெரிய மற்றும் பிரபல நட்சத்திரங்கள் யாரும் ஏனோ பெரிதாக குரல் கொடுக்கவில்லை. எனினும், மற்ற மொழி சினிமாவைச் சேர்ந்த பிரபலங்கள் அடூர் கோபாலகிருஷ்ணன் போன்ற சிலர் வலுவாக தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இந்த எதிர்ப்புகளை அடுத்து, சட்டத் திருத்த மசோதா குறித்து தகவல் தொழில்நுட்பத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, அந்தக் குழுவின் தலைவரும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான சசிதரூர் தலைமையில் கூடி தற்போது ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்த ஆலோசனையில் சட்டத் திருத்த மசோதா குறித்து சினிமாத் துறையினர் மத்தியில் எழுந்துள்ள அச்சங்கள் குறித்து தகவல் ஒளிபரப்புத் துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க உள்ளனர். இந்த ஆலோசனையின் முடிவில் அடுத்த எந்த மாதிரியான நடவடிக்கைகள் இந்த விவகாரத்தில் எடுக்கப்படும் எனத் தெரியவரும்.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com