விஜய்சேதுபதி நடித்த ‘சீதக்காதி’ படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள படம்‘சீதக்காதி’. தனது 25 ஆவது படமான இதில் அய்யா ஆதிமூலம் என்ற கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளார். இந்தப் படம் நாளை திரைக்கு வரவுள்ளது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில்,‘சீதக்காதி’ படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கீழக்கரையைச் சேர்ந்த முகமது சலையா உசேன் என்பவர் தொடர்ந்த வழக்கில், வள்ளல் சீதக்காதி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் இருக்கலாம் எனப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது மனுவில், “பதினேழாம் நூற்றாண்டில் தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த புகழ்பெற்ற வள்ளல் சீதக்காதியின் பெயரை படம் நினைவுபடுத்துகிறது. ஷெய்க் அப்துல் காதர் என்பது அவரது இயற்பெயராக இருந்தாலும், மக்கள் அவரை வள்ளல் சீதக்காதி என்று அழைத்தார்கள். சீறாப்புராணம் என்ற காவியத்தை எழுதிய உமறுப்புலவருக்கு சீதக்காதி உதவி இருக்கிறார். சேதுபதி சமஸ்தானத்தில் அரசுக்கும் அவர் உதவி இருக்கிறார்.
பல்வேறு புகழை கொண்டுள்ள அவரது பெயரில் நாடக கலைஞரின் வாழ்க்கையை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் வன்முறை காட்சிகளிலோ, ரொமன்ஸ் காட்சிகளிலோ நடித்திருக்க வாய்ப்புள்ளது. இதனால், நிஜ வள்ளல் சீதக்காதியை தவறாக புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. அதனால், இந்தப் படத்தை ‘சீதக்காதி’ என்ற பெயருடன் வெளியிட தடைவிதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
‘சீதக்காதி’ படத்துக்கு தடை கோரிய இந்த வழக்கு நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.