சினிமா
“தியாகராஜர் குறித்த கருத்திற்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்” - கர்நாடக இசைக் கலைஞர்
“தியாகராஜர் குறித்த கருத்திற்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்” - கர்நாடக இசைக் கலைஞர்
தியாகராஜர் குறித்த கருத்திற்காக கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கர்நாடக இசைக் கலைஞர்கள் கூறியுள்ளனர்.
ஊரடங்கு காலம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் திரைத்துறை குறித்து எந்தச் செய்திகளும் வெளியாகவில்லை. படப்பிடிப்பு இருந்தால் தானே செய்திகள் வரும். ஒட்டுமொத்த திரை உலகமே முடங்கிக் கிடக்கும் இந்தக் காலகட்டத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் நேரலை மூலம் நடிகர் கமல்ஹாசனும் நடிகர் விஜய் சேதுபதியுடன் கலந்துரையாடினார்.
அப்போது அவரிடம் பல விஷயங்கள் குறித்து கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு மிக உற்சாகமாகப் பதிலளித்தார் நடிகர் கமல்ஹாசன். வணிக சினிமா குறித்து உரையாடலின் போது அவர், “சகலகலா வல்லவன் படத்தை எல்லோரும் திட்டினார்கள். பாலுமகேந்திரா திட்டினார். நானும் சேர்ந்து திட்டினேன். ஏனெனில் நண்பர்கள் எல்லோரும் இப்படித் திட்டுகிறார்களே என அவமானமாகப் போய்விட்டது. பிறகு யோசித்துப் பார்த்தேன். அந்த வழியை நான் தொடவில்லை என்றால், ராஜ் கமல் நிறுவனத்தையே ஆரம்பித்திருக்க முடியாது.
இது டிக்கெட் போட்டுச் செய்கிற வியாபாரம் தானே. தர்மத்திற்கு நான் பாடும் பாட்டில்லையே? தியாகராஜர் எப்படி ராமனைப் போற்றி தஞ்சாவூர் வீதியில் பிச்சை எடுத்துப் பாடினாரோ அப்படிப்பட்ட கலையில்லையே? எனக்கு கார் வாங்க வேண்டும் என்று ஆசை. டிக்கெட் விற்க வேண்டும் என்று ஆசை. எம்.ஜி.ஆர். மாதிரி, சிவாஜி மாதிரி ஆகவேண்டும் என்று ஆசை. பிறகு மக்களை மகிழ்விக்கமாட்டேன் என்று என்ன வீம்பு? அவர்களுக்கு என் கலை புரியவில்லை என்றால் அவர்களை அங்குக் கொண்டுவர வேண்டுமே தவிர, நான் போய் தனியாகக் காட்டி மகரிஷியாக உட்கார்ந்து கொள்ள முடியாது” எனப் பேசியிருந்தார்.
இதனிடையே நான்கு நாட்களுக்கு முன் பேசிய இந்தப் பேச்சு மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரை இழிவுபடுத்தும் விதமாக உள்ளது எனச் சிலர் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. இக்கருத்தைக் கூறியதாக கமல்ஹாசன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் கர்நாடக இசைக் கலைஞர்கள் தங்களின் உணர்வைப் புண்படுத்தும்விதமாக கமல்ஹாசனின் கருத்து உள்ளதாக கூறியுள்ளனர். பிரபல கர்நாடக இசைப்பாடகரான பாலக்காடு ராம் பிரசாத், பொறுப்பற்ற கருத்துக்களுக்காக கமல்ஹாசனுக்கு எதிராகப் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஆன்லைனில் அந்தக் கடிதம் வெளியாகியுள்ளது. அதில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கோரியுள்ளார். மேலும் அதில் 3000க்கும் மேற்பட்ட பிரபலங்கள் இந்தப் புகார் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
அவரது புகார் மனுவில், ராம் பிரசாத், “தியாகராஜா போன்ற ஒரு புனித ஆத்மாவின் உருவத்தை யாராலும் களங்கப்படுத்த முடியாது. அவரைப் பற்றிய கருத்து சமூகத்தின் ஒட்டுமொத்த பிரிவினரையும் புண்படுத்தும். அவருக்கு எதிரான உங்கள் தீங்கு விளைவிக்கும், இழிவான கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். மேலும் இந்த விவகாரம் குறித்து மஹதியும் தன் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.